மதுரை தெற்குமாசி-மேலமாசி வீதி சந்திப்பில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
தமிழகம்

மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மதுரையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

மதுரை மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மதுரை மாநகர் மற்றும் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் தெற்குமாசி வீதி-மேலமாசி வீதி சந்திப்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு முன்னாள் அமைச்சரும், மாநகர செயலாளருமான செல்லூர் கே.ராஜூ, புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:

அதிமுக ஆட்சியில் மாநகராட் சிக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது. மதுரையில் ரவுடிகள் அட்டகாசம் ஒடுக்கப்பட்டது. அதனால், மதுரையில் கடந்த 10 ஆண்டுகளாக வணிகர்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் வியாபாரம் செய்தனர்.

தற்போது சட்டம், ஒழுங்கு மோசமாகிவிட்டது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களைத்தான் திமுக ஆட்சியில் திறந்து வைக்கின்றனர். நாங்கள் மோடியை பாராட்டி பேசினால் அடிமைகள் என்பார்கள். அவர்கள் ஆதரித்தால் தோழமை என்பார்கள். மோடியை எதிர்க்க திமுக தயங்குகிறது. திமுக எதிர்க் கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடும், ஆளும் கட்சியாக வந்த பிறகு ஒரு நிலைப்பாட்டையும் எடுக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT