தமிழகம்

நெல்லையில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு; ஒரேநாளில் 34 பேருக்கு தொற்று உறுதி: கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுமா?

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 34 பேருக்கு தொற்று உறுதியானது. பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் முகக்கவசம் அணிவதிலும், தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதிலும்மக்களிடையே அலட்சியம் தொடர்கிறது. அரசுத்துறைகளும் இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 8 நாட்களில் 109 பேருக்கு கரோனா பாதிப்பு புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 14 ஆக இருந்தது. நேற்று காலையில் இது 34 ஆக அதிகரித்திருந்தது. இவர்களில் 20 பேர் திருநெல்வேலி மாநகர பகுதிகளை சேர்ந்தவர்கள். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவிகள் விடுதியில் உள்ள பெண் மருத்துவர் ஒருவருக்கும் தொற்று உறுதியானது. பாளையங்கோட்டையில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் ஒரு பெண்ணுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

திருநெல்வேலி மாநகரில் சாந்திநகர் போலீஸ் காலனி, உடையார்பட்டி அடுக்கு மாடி குடியிருப்பு, மீனாட்சிபுரம், சீனிவாசநகர் 3-வது குறுக்குத்தெரு, பெருமாள்புரம், மேலப்பாளையம் சாலை இன்ஜினியரிங் காலனி, தியாகராஜநகர் 15-வது தெற்கு, கேடிசி நகர் 7-வது மெயின் தெரு, அன்புநகர் என மாநகரில் தொற்று பரவலாக கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் நாங்குநேரி வட்டாரத்தில் 5 பேர், வள்ளியூரில் 3 பேர், சேரன்மகாதேவியில் 2 பேர், அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, ராதாபுரம் வட்டாரங்களில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாநகர பகுதிகளிலும், மாவட்டத்தின் பிறஇடங்களிலும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களிடையே முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதில் அலட்சியம் தொடர்கிறது.

அரசின் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதில் மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்களும், சுகாதாரத்துறையும் அதிக அக்கறை செலுத்தியதாக தெரியவில்லை. முகக்கவசம் அணியாதவர்களுக்கு காவல்துறை அவ்வப்போது அபராதம் விதித்தாலும் மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை.

பேருந்துகளில் 50 சதவீத இருக்கையில் அமர்ந்து பயணிக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் அந்த நடைமுறையை பின்பற்றாமல் நின்று கொண்டு நெரிசலுடன் பயணிக்கும் அளவுக்கு மக்களை ஏற்றுகின்றனர். இதுபோல் அரசின் பல்வேறு கட்டுப்பாடுகளும் காற்றில் பறக்கின்றன.

அரசு நிகழ்ச்சிகள், அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், போராட்டங்களில் பங்கேற் பவர்களில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிவதில்லை. வணிக நிறுவனங்கள், சந்தைகள், கடைகளுக்கு பொருட்களை வாங்க வருவோரில் 90 சதவீதத்துக்கு மேற்பட்டோர் முகக்கவசம் அணியவில்லை. பலர் மூக்கு, வாயை மூடும் வகையில் முகக்கவசத்தை முறையாக அணியவில்லை. பொதுமக்களிடம் தொடரும் அலட்சியத்தால் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT