தி. வேல்முருகன் | கோப்புப் படம். 
தமிழகம்

ஜவுளி ஜிஎஸ்டி உயர்வு: கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி கடன்களை ஏழை, எளிய மக்களிடம் வசூலிப்பதா? - வேல்முருகன் கேள்வி

செய்திப்பிரிவு

சென்னை: ஜவுளி ரகங்கள் மீது ஜிஎஸ்டி வரியை உயர்த்தி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தள்ளுபடியான கடன்களை, வரி விதிப்பு என்ற பெயரில் ஏழை, எளிய மக்களிடம் வசூலிப்பதா? என்று வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகையும், லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடன் தள்ளுபடியும் செய்துவரும் மோடி தலைமையிலான மத்திய அரசு, ஏழை, எளிய, நடுத்தர மக்களை வஞ்சித்து வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. திட்டமிட்டு கடன்களைச் செலுத்த மறுத்த கார்ப்பரேட் நிறுவனங்களின் கடனில் பெரும்பகுதி தள்ளுபடி செய்த மோடி அரசு, கடனைத் திரும்பச் செலுத்தாத 13 நிறுவனங்களின் சொத்துகளைத் தனக்கு வேண்டப்பட்ட முதலாளிகளுக்கு, குறைவான தொகையில் கைமாற்றிவிட்டது.

ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களை, வரி விதிப்பு என்ற பெயரில் ஏழை, எளிய மக்களிடம் வசூலிக்கும் நடவடிக்கையை மோடி அரசு மேற்கொண்டு வருகிறது. உணவுப் பொருட்களுக்கும், நாம் அன்றாடப் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்புக்கு ஜி.எஸ்.டி வரியை உயர்த்தியுள்ள மோடி அரசு, தற்போது ஜவுளி ரகங்கள் மீதான 5 விழுக்காடு ஜிஎஸ்டி வரியை 12 விழுக்காடாக உயர்த்தி அரசாணையை வெளியிட்டுள்ளது.

பருத்தி நூல் விலை கடந்த நவம்பர் 1ஆம் தேதி, வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஜவுளித் தொழில் துறை கடும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தும், போராட்டத்தில் ஈடுபட்டும் வருகின்றனர்.

இச்சிக்கல் குறித்தெல்லாம் சிந்திக்காத மோடி அரசு, ஜவுளி ரகங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்தியுள்ளது கண்டனத்துக்குரியது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி வரும் கைத்தறி தொழிலை நம்பி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். கரோனா ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த கைத்தறி தொழில், கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில், ஜிஎஸ்டி வரி உயர்வால் கைத்தறி தொழில் முழுவதுமாக அழிந்துவிடும் அபாயம் உள்ளது. இந்த வரி உயர்வு என்பது கைத்தறி சங்கங்கள், முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 3 மாதங்களாக கிலோ 3,600 ஆக இருந்த பட்டு விலை 6,000 ரூபாயாக அதிகரித்துள்ளதால், சேலை மற்றும் பட்டுத்துணிகள் அதிக அளவில் தேக்கமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 8,000 ரூபாய் பட்டுச் சேலை, இனி 11 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் நிலை உள்ளது. இதனால், பொங்கல் நேரத்தில், பட்டுச் சேலை விற்பனை கடுமையாக பாதிக்கப்படும்.

எனவே, கைத்தறித் தொழிலையும், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். கைத்தறி பட்டு மற்றும் பட்டுச் சேலை உற்பத்திப் பொருட்களுக்கு விதித்துள்ள ஜிஎஸ்டி வரியை காதிக்கு வரிவிலக்கு அளித்தது போன்று, குடிசைத் தொழிலான கைத்தறிக்கும் முழுமையாக ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது.

மேலும், கைத்தறித் தொழிலுக்கு வரி விலக்கு தொடர்பாக, நிர்மலா சீதாராமனுக்குக் கடிதம் எழுதுவதாகக் கூறியுள்ள தமிழ்நாடு அரசு, கைத்தறிக்கும் முழுமையாக ஜிஎஸ்டி வரியை ரத்து செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது'' என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT