புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 12-ல் தேசிய இளைஞர் தினவிழாவை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருகிறார் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
நாடு முழுவதும் நேற்று முதல் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு கரோனா தடுப்பு ஊசி செலுத்தும் முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக வைசியால் வீதியில் உள்ள சுசீலாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள மாணவிகளுக்கு தடுப்பூசி முகாமினை துணை நிலை ஆளுநர் தமிழிசை துவக்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஆளுநர் தமிழிசை கூறுகையில், "புதுச்சேரியில் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு இதுவரை 454 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. பெற்றோர் அனுமதி கடிதம் தந்த பிறகே தடுப்பூசி போடப்படுகிறது. இளைஞர்கள் உற்சாகமாகத் தடுப்பூசி செயல்படுவதைப் பார்த்து பெரியோர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். புதுச்சேரியில் கரோனா, ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த அதிகப்படியான கட்டுப்பாடுகள் கொண்டு வர வாய்ப்பு உள்ளது. முதல் டோஸை இன்னும் 1 லட்சம் பேர் வரை செலுத்த வேண்டியுள்ளது. அதேபோல் அரசு ஊழியர்களில் தடுப்பூசி போடாதவர்கள் விவரங்களை சேகரிக்கிறோம். அதற்கான அறிக்கையை சுகாதாரத்துறை பெறவுள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள தேசிய இளைஞர் தின விழாவில் நாடு முழுவதுமிருந்து 7,500 இளையோர் பங்கேற்கின்றனர். இந்நிகழ்வை பிரதமர் மோடி வரும் 12ஆம் தேதி புதுச்சேரி வருகை தந்து துவக்கி வைக்க உள்ளார். கரோனா தடுப்பூசி செலுத்தியோர் மட்டுமே இந்நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். அதனால் தொடக்க நிகழ்வில் 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். புதுச்சேரி வரும் பிரதமர் காமராஜர் மணி மண்டபத்தை காணொலியில் திறக்கிறார்.
பிரதமர் வருகையொட்டியும், நான்கு நாட்கள் நடக்கும் தேசிய இளைஞர் தின விழா ஏற்பாடுகளை பார்வையிடவும் நாளை மத்திய அமைச்சர் அனுராக்தாக்கூர் புதுச்சேரி வருகிறார். விழா நடைபெறும் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் ஆய்வு செய்வார். கரோனா வழிமுறைகளை பின்பற்றியே விழாக்கள் நடத்தப்படுகிறது" என்று குறிப்பிட்டார்.
பேட்டியின் போது அமைச்சர் லட்சுமிநாராயணன் உடனிருந்தார்.