புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் புகழேந்தி உயிரிழந்த நிலையில், துப்பாக்கி சுடும் பயிற்சித் தளத்தை உடனே மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டியில் தமிழக காவல் துறையின் துப்பாக்கி சுடும் பயற்சி தளம் உள்ளது. இங்கு கடந்த டிசம்பர் 30-ம் தேதி மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும், தமிழக போலீஸாரும் தனித்தனியே துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டனர். இங்கிருந்து துப்பாக்கியால் சுடப்பட்டதில், சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் பாட்டி வீட்டில் இருந்த புகழேந்தியின் என்ற 11 வயது சிறுவனின் தலையில் பாய்ந்தது. இதனையடுத்து ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனின் தலையில் இருந்த குண்டு அகற்றப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி சிறுவன் புகழேந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் மற்றும் போலீஸார் மீது கீரனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து கொத்தமங்கலப்பட்டி மற்றும் நார்த்தாமலை ஆகிய 2 இடங்களில் சிறுவன் புகழேந்தியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தினால் திருச்சி, புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், எஸ்.பி பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து 25 மணி நேரம் நீடித்த மறியல் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. மேலும், புகழேந்தியின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், இன்று தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுவனின் உடல் பிரேத பிசோதனை செய்யப்பட்ட பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தை உடனே மூட வேண்டும். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு வேலையும், அரசு வீடும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும் போராட்டம் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.
இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நார்த்தாமலை பகுதியில் போலீஸார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மது அருந்திவிட்டு சட்டம் - ஒழுங்கை பாதிக்கும் வகையிலான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நார்த்தாமலை உட்பட குளத்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 12 டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் இன்று மூடுவதற்கு மாவட்ட டாஸ்மாக் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.