தமிழகம்

மின் கட்டண ரசீதில் ஜிஎஸ்டி குறிப்பிட்டுள்ளதால் குழப்பம்: ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு குறித்து மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்

செய்திப்பிரிவு

ஈரோடு: மின் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி இல்லை என மின் துறை அமைச்சர் அறிவித்துள்ள நிலையில், ரசீதில் ஜிஎஸ்டி என குறிப்பிட்டு வசூல் செய்யப்படுவதால் குழப்பம் எழுந்துள்ளது. இந்நிலையில், மின் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி இல்லை என்றும், இதர கட்டணங்களுக்கு மட்டுமே கவுன்சில் முடிவுப்படி ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக மின்கட்டணம் செலுத்தும் நுகர்வோருக்கு வழங்கப்படும் ரசீதில், மின் கட்டணத்துடன் ஜிஎஸ்டி என குறிப்பிட்டு ஒரு தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விளக்கம் அளித்த மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மின்கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவது இல்லை என கடந்த 2-ம் தேதி தெரிவித்தார்.

இதனிடையே ஈரோடு மாவட்ட ஏஐடியுசி தலைவர் சின்னசாமி, மின் துறை அமைச்சருக்கு அனுப்பி உள்ள மனுவில், ‘மின் கட்டண ரசீதில் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வருகிறது’ எனக் குறிப்பிட்டு, அதற்கு ஆதாரமாக ஒரு மின் கட்டண ரசீதையும் இணைத்து அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது. மின் கட்டணம் தவிர, இதர கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி வசூலிக்க வேண்டுமா என ஜிஎஸ்டி கவுன்சிலிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இதற்கு 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் அளிக்கப்பட்ட பதிலில், இதர கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி வசூலிக்க வேண்டும் என கவுன்சில் தெரிவித்தது.

இதன்படி, விண்ணப்பக் கட்டணம், மின் அளவி வாடகை, உபகரணங்கள் சோதனைக் கட்டணம், மின் அளவி இடமாற்றக் கட்டணம் ஆகியவற்றுக்கு 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வருகிறது.

ஜிஎஸ்டி அமலுக்கு வந்த 2017-ம் ஆண்டு ஜூலை முதல், 2018-ம் ஆண்டு மார்ச் வரை இதர கட்டணம் செலுத்திய மின் நுகர்வோரிடம் இருந்து நிலுவை ஜிஎஸ்டி தற்போது வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, ஒரு கோடியே 2 லட்சம் நுகர்வோரிடம் இருந்து, ரூ.34.52 கோடி நிலுவைத் தொகையாக வசூலிக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து அனைத்து வசூல் மையங்களிலும் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. எனவே, அமைச்சர் அறிவிப்பின்படி மின் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்படவில்லை என்பதே சரியானது என்றார்.

அமைச்சர் விளக்கம்

சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “மின்வாரியத்தில் இதர சேவைகளுக்கு ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

2017-ல் ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டது. 2018-ம் ஆண்டே மின்வாரியத்தில் இதர சேவைகளுக்கு ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்பட்டது கடந்த ஆட்சியில்தான். இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படுவதாக தவறான தகவலை கூறியுள்ளார்.

பொதுவாக, மின்கட்டணத்தைப் பொறுத்தவரை எவ்வித ஜிஎஸ்டி கட்டணமும் வசூலிக்கப்படுவதுஇல்லை. இதர சேவைகளுக்குத்தான் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுதொடர்பாக, எவ்வித புதிய உத்தரவுகளும் பிறப்பிக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT