கரோனா தொற்று அதிகரித்து வருவதால், கோவையில் கொடிசியா உள்ளிட்ட தனியார் மையங்களில் மீண்டும் கரோனா சிகிச்சை மையங்களை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலையின்போது, ஆக்சிஜன் தேவையுடன் கூடிய படுக்கைகள் கிடைக்காமல், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, கொடிசியா, மத்தம்பாளையம், பொள்ளாச்சி, காரமடை, சோமனூர் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 6,630 சாதாரண படுக்கைகள், 465 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை கொண்ட 35 கரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஊராட்சி ஒன்றியங்கள் சார்பில், 12 வட்டாரங்களில் 3,030 சாதாரண படுக்கைகளுடன் கூடிய 241 தனிமைப்படுத்தும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
தொற்று பரவல் குறையத் தொடங்கிய பின்னர், கரோனா சிகிச்சை மையங்கள், தனிமைப்படுத்தும் மையங்கள் அகற்றப்பட்டன.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. ஒமைக்ரான் தொற்று பரவலும் உள்ளது. கோவையில் கடந்த சில நாட்களாக தினசரி 80-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி வருகிறது. இதையடுத்து, மீண்டும் கரோனா சிகிச்சை மையங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக, அதிகாரிகள் கூறும்போது, ‘‘கடந்தாண்டு கல்வி நிலையங்களின் வளாகங்களில் கரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. தற்போது பள்ளி, கல்லூரிகள் இயங்கிவருகின்றன.
மீண்டும் எந்தெந்த இடத்தில் சிகிச்சை மையங்கள் அமைக்க முடியும் என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது’’ என்றனர்.
மாவட்ட ஆட்சியர் ஆய்வு
முதல்கட்டமாக, அவிநாசி சாலை கொடிசியா வர்த்தக கண்காட்சி மையத்தில் டி மற்றும் இ அரங்குகளில் 700 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிகிச்சை சிறப்பு வார்டு அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கொடிசியா அரங்கையும், அரசு கலைக்கல்லூரி வளாகத்தையும் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர்.
கரோனா கட்டுப்பாட்டு அறை
மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,‘‘ மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 24 மணி நேரம் இயங்கும் வகையில், கரோனா கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி விவரங்கள், படுக்கை இருப்புகள் விவரம், ஆர்டிபிசிஆர் சோதனை விவரம் போன்றவற்றை அறிய இந்த கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 0422-2306051, 2306052, 2306053, 2306054, 2303537 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். ஒமைக்ரான் தொற்று பரவி வருவதால், கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் ஹெல்ப் டெஸ்க் அமைக்க வேண்டும். பண்டிகைக்காலத்தில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,’’ எனத் தெரிவித்துள்ளார்.