வீரவநல்லூர் புதுஅம்மன் கோயில் தெருவை சேர்ந்த விவசாயி சுப்பையா (70), மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க நேற்று வந்திருந்தார். அவர் ஒரு கேனில் எடுத்து வந்திருந்த மண்ணெண்ணெயை அவரது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். அங்கிருந்த போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாளிடம் அவர் அளித்த மனு:
வீரவநல்லூர் மாடன்குளம் பகுதியில் இரண்டரை ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறேன். இதுபோல் 10 பேர் 30 ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறார்கள். 2 ஆண்டுகளுக்குமுன் எங்கள் குளத்துக்கு அருகியுள்ள கூத்தாடி குளத்தின் மறுகால் மதகை உயர்த்தியதால் எங்கள் பகுதியில் 20 ஏக்கருக்குமேல் தண்ணீரில் மூழ்கி விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன. எங்கள் பகுதியில் விவசாயம் பாதிக்காத வகையில் வாழ்வாதாரத்தை காப்பாற்ற கோரி கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து மனு அளித்து வருகிறோம்.
ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயர்த் தப்பட்டுள்ள மறுகாலை இடித்து எங்கள் விளைநிலங்களை காப்பாற்ற வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.