மதுரை: வாக்காளர்களுக்குப் பணம் வழங்கியதாக அதிமுகவினரைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் மீதான வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் வழங்கியதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் உட்பட 26 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி உட்பட 26 பேர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்.
அதில், ''தமிழகத்தில் 2016-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில் செல்லூர் ராஜூ போட்டியிட்டார். அதிமுக சார்பில் வாக்காளர்களுக்குப் பணம் வழங்கப்பட்டது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியினர் புகார் அளித்தனர். இருப்பினும் வாக்காளர்களுக்குப் பணம் வழங்குவதை போலீஸார் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. பணம் கொடுத்தவர்கள் மீது வழக்குப் பதிவும் செய்யவில்லை.
இதைக் கண்டித்து ஜெய்ஹிந்த்புரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து எங்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். வாக்கிற்கான மதிப்பைக் காப்பாற்றும் வகையில் தான் நாங்கள் போராட்டம் நடத்தினோம். இந்த வழக்கு அடிப்படையில் போலீஸார் அடிக்கடி எங்களைத் துன்புறுத்தி வருகின்றனர். இதனால் வழக்கை ரத்து செய்ய வேண்டும்'' என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டதைக் கண்டித்தே மனுதாரர்கள் போராட்டம் நடத்தியுள்ளதாகக் கூறிய நீதிபதி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கவில்லை எனத் தெரிவித்தார். மனுதாரர்களில் ஒருவர் அதே தொகுதியில் போட்டியிட்டுள்ளார் என்பதைக் குறிப்பிட்ட நீதிபதி, தற்போது வரை வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டினார். எனவே, மனுதாரர்கள் மீதான வழக்கை ரத்து செய்வதாக அறிவித்து, வழக்கை முடித்து வைத்தார்.