தமிழகம்

குடும்பத்தினரைக் கொன்று தொழிலதிபர் தற்கொலை: பங்குச்சந்தை நஷ்டத்தால் விபரீத முடிவு

செய்திப்பிரிவு

சென்னை கொத்தவால்சாவடி கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் வசித்தவர் தேவேந்திரகுமார் (48). இவரது மனைவி தீப்தி (38), மகள் சொர்பி(15), மகன் மானஸ் (7). இவர்களுடன் தேவேந்திரகுமாரின் தந்தை விஷம்பர் நாத் (80), தாய் ஷோபாதேவி (66) ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

தேவேந்திரகுமார் வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை பங்குச்சந்தை தொழிலில் முதலீடு செய்துள்ளார். இந்த தொழிலில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், விட்ட பணத்தை எப்படியாவது பெற வேண் டும் என்பதற்காக பலரிடம் கடன் வாங்கி மீண்டும் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளார். அதிலும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டுள்ளனர். இதனால் தேவேந்திரகுமார் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு தேவேந்திரகுமார் குடும்பத்துடன் திரையரங்கத்துக்கு இரவுக் காட்சி படம் பார்க்க சென்றுள்ளார். நள்ளிரவில் வீடு திரும்பிய அவர்கள் தூங்கச் சென்றனர். நேற்று காலை 4 மணி அளவில் வீட்டில் மின் விளக்குகள் எரிவதைப் பார்த்து, ஷோபாதேவி தனது அறையில் இருந்து வெளியே வந்திருக்கிறார்.

அப்போது தேவேந்திரகுமார் கையில் கத்தியுடன் வீட்டுக்குள் அங்குமிங்கும் வெறிபிடித்தவரைப் போல சுற்றிக்கொண்டே இருந்தார். இதனால் ஏதோ அசம்பாவிதம் நடக் கப்போகிறது என்பதை உணர்ந்த அவர், தேவேந்திரகுமாரிடமிருந்த கத்தியை பறிக்க முயன்றார். ஆனால் தேவேந்திரகுமார், தாய் ஷோபாதேவியை தள்ளிவிட்டு குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்த அறைக்குள் புகுந்தார். அங்கு அவர்கள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். அவர்களின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்திருக்கிறார் தேவேந்திரகுமார்.

அந்த அறையில் இருந்து வெளியே வந்த அவர் பக்கத்தில் மனைவி தீப்தி அறைக்கு சென்று அவரையும் கழுத்தை அறுத்து கொன்றார். பின்னர் தனது தாய் கண் முன்னே தனக்குத் தானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டார்.

ஷோபாதேவி, விஷம்பர் நாத் ஆகியோரின் கூச்சல் சத்தத்தை கேட்டு அருகே இருந்தவர்கள் திரண்டு வந்தனர். கொத்தவால் சாவடி போலீஸாரும் விரைந்து சென்று 4 பேரின் உடலையும் மீட்டு சென்னை அரசு போது மருத்துவ மனைக்கு பிரேதப் பரிசோதனைக் காக அனுப்பி வைத்தனர்.

பீரோவில் ஒட்டப்பட்டிருந்த கடிதம்

வீட்டில் இருந்த பீரோவில் ஒரு கடிதம் ஒட்டப்பட்டு இருந்தது. அதில், "சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு, எனது, குடும்பத்தை நானே கொல்லப்போகிறேன். நானும் தற்கொலை செய்துகொள்வேன். இதற்கு நானே பொறுப்பு. வேறு யாரும் காரணம் இல்லை" என்று எழுதப்பட்டு இருந்தது.

மற்றொரு கடிதத்தில் 3 செல்போன் எண்களை எழுதி, “நாங்கள் இறந்த தகவலை இந்த நம்பருக்கு போன் செய்து கூறிவிடுங்கள்” என்று கூறப்பட்டு இருந்தது.

SCROLL FOR NEXT