தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற 17-வது கட்ட மெகா முகாமில்15.16 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
புதிதாக உருமாறிய ஒமைக்ரான் கரோனா வைரஸ் தொற்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் 1,500-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 121 பேருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனால், கரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 16 மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. முதல் தவணை தடுப்பூசி 87 சதவீதம் பேருக்கும், இரண்டு தவணை தடுப்பூசி 59 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், 17-வது கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாம் நேற்று தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்றது.இதில் 15.16 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாம் பணியில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு இன்று (திங்கள்) விடுமுறை அளிக்கப்படுகிறது. அதனால், இன்று தடுப்பூசி மையங்கள் செயல்படாது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.