அரசின் நலத் திட்டங்களை தொடங்கி வைக்க வருவதால் தமிழக அரசின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதாக திமுக மகளிரணிச் செயலாளரும், அக்கட்சியின் நாடாளுமன்ற குழு துணைத் தலைவருமான கனிமொழி விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மக்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைக்கவே பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். அதனால் அவரது வருகை திமுக அரசு எதிர்க்கவில்லை. அரசு என்பது வேறு. கருத்தியல் என்பது வேறு. கடந்த அதிமுக ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைக்க வந்த பிரதமர் மோடியை திமுக எதிர்த்தது குறித்து கேள்வி எழுப்புகிறார்கள்.
மத்திய பாஜக அரசின் அனைத்துசெயல்பாடுகளையும், சட்டங்களையும் கடந்த அதிமுக அரசு ஆதரித்தது. வேளாண் சட்டங்கள், குடியுரிமைச் சட்டங்கள் என்று மக்களுக்கு எதிரான சட்டங்களை ஆதரித்து நாடாளுமன்றத்தில் அதிமுக வாக்களித்தது.
ஆனால், வேளாண் சட்டங்கள், குடியுரிமைச் சட்டங்கள் என்று மக்கள் நலன்களுக்கு எதிரான பாஜக அரசின் சட்டங்களை கடுமையாக எதிர்த்து வருகிறது. எனவே, இந்த விஷயத்தில் அதிமுக, திமுகவை ஒப்பிட வேண்டாம்.
ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், பாரம்பரிய கலைஞர்கள் பாதிக்கப்படுவது உண்மைதான். மக்களின் பாதுகாப்புக்காகவே கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களிசை உள்ளிட்ட பாரம்பரிய கலைகளையும், கலைஞர்களையும் பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கும். இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.