தமிழகம்

கோதவாடி குளத்தை பார்வையிட்ட நாசா விஞ்ஞானி

எஸ்.கோபு

கோதவாடி குளத்தை நேற்று பார்வையிட்ட நாசா விஞ்ஞானி ந.கணேசன் நவீன கருவிகள் பயன்படுத்தி குளத்தின் நீர்கொள்ளளவை கணக்கீடு செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

பொள்ளாச்சி அடுத்த கோதவாடி பகுதியில், சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் குளம் அமைந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக நீரின்றி வறண்டு கிடந்த குளத்தை, கெளசிகா நீர் கரங்கள் அமைப்பின் வழிகாட்டுதலின் பேரில் கோதவாடி குளம் பாதுகாப்பு அமைப்பினர் தூர்வாரி கரைகளை பலப்படுத்தினர். இதையடுத்து பல்வேறு அமைப்பினர் விவசாயிகள் மற்றும் அனைத்து கட்சியினரின் கோரிக்கையின் பேரில் திருமூர்த்தி அணையிலிருந்து குளத்துக்கு பிஏபி வாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு குளம் நிரப்பப்பட்டது.

11.07 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட இந்த குளத்தின் மூலம் 126.61 ஹெக்டேர் நிலங்கள் நேரடியாக பாசனம் நடைபெறுகின்றன. நிலத்தடி நீர் செறிவூட்டல் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மறைமுகமாக பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில், பொள்ளாச்சி அடுத்த ஜமீன் காளியாபுரத்தை சேர்ந்தவரும், நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றும் விஞ்ஞானியுமான நா.கணேசன் நேற்று குளத்தை பார்வையிட்டு குளம் பாதுகாப்பு அமைப்பினருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் அவர், ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, “கோதவாடி குளம் தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்பட்ட பின்னர் குளத்தில் தேங்கியுள்ள நீரின் கொள்ளளவு அதிகரித்துள்ளது. இதனை கணக்கீடு செய்ய சோனோபோய் (Sonobuoy) என்னும் நவீன கருவி மூலம் நீருக்கடியில் எடுக்கப்படும் ஒலி சமிக்ஞைகளை கொண்டு ஆய்வு மேற்கொண்டு, தற்போது தேங்கியுள்ள நீரின் கொள்ளளவை துல்லியமாக கணக்கீடு செய்ய முடியும்” என்றார்.

SCROLL FOR NEXT