தாம்பரம் மாநகராட்சியில் ரூ.9.63 கோடியில் 132 சாலைகள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளுக்காக டெண்டர் விடப்பட்டுள்ளது.
தாம்பரம் மாநகராட்சியில் நகரின் முக்கியச் சாலைகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் சாலைகள் மழையால் சேதமடைந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதியடைகின்றனர். தாம்பரம் மாநகராட்சியில் உள்ள சாலைகளை சீரமைக்க மாநகராட்சிக்கு சிறப்பு நிதி அரசிடமிருந்து பெறப்பட்டுள்ளது.
இதன்படி முதற்கட்டமாக மாநகராட்சியின் முக்கியச் சாலைகளை சீரமைக்க மாநில பேரிடர் மேலாண்மை நிதி 2021-22-ம் ஆண்டு நிதியின்கீழ் ரூ.9.63 கோடிக்கு பணிகள் நடைபெறுள்ளன.
மேலும் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 132 சாலைகளை சீரமைக்கும் பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாம்பரம் மாநகராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்காலிக சீரமைப்பு பணிக்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த பணிகளை வரும் பொங்கல் திருநாளுக்குள் செய்துமுடிக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
தற்போது மழை பெய்துள்ளதால், அனைத்து சாலைகளும் ஈரத்தன்மையுடன் உள்ளன. இந்த ஈரத்தன்மையுடன் சாலைப் பணிகளை மேற்கொண்டால் சீக்கிரம் பழுது ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சாலைப் பணியை தொடங்கும் முன்பு அந்த சாலை முற்றிலும் ஈரமில்லாமல் காய்ந்த பிறகு சாலை அமைக்க வேண்டும்.
ஒவ்வொரு சாலை பணி நடைபெறும் போதும் சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். சாலைக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் தரமானதாக இருக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.