தமிழகம்

சென்னையில் கடன் பிரச்சினையால் மனைவி, குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு வங்கி அதிகாரி தற்கொலை 

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை பெருங்குடியில் கடன் பிரச்சினை காரணமாக மனைவி, இரண்டு குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலையால் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் 7வது மாடியில் கடந்த ஒரு வருடமாக வாடகைக்கு குடியிருந்து வந்தவர் மணிகண்டன் (42). இவருக்கு பிரியா (36) என்ற மனைவியும் தரன்(10), தாஹன் (1) என்ற குழந்தைகளும் இருந்தனர்.

மணிகண்டன் தனியார் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். ஆனால், கடந்த இரண்டு மாத காலமாக அவர் வேலைக்குச் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கான காரணம் என்னவென்றும் உறுதியாகத் தெரியவில்லை. மேலும், மனிகண்டன் அவரது நண்பர்களிடத்தில் பல லட்சம் ரூபாய், கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. கடன் பிரச்சினை காரணமாக கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தக் கடனுக்கு அவர் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாக இருந்ததே காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆன்லைன் விளையாட்டில் மணிகண்டன் ரூ.1 கோடி வரை இழந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அவரது செல்போனைக் கைப்பற்றிய போலீஸார் அதனை சைபர் பிரிவுக்கு அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் இன்றும் அதேபோல் வாக்குவாதம் நடந்ததாகவும் பின்னர் அவர் வீடு நீண்ட நேரம் நிசப்தம் சூழ இருததாகவும் திறந்துகிடந்த கதவின் வழியே பார்த்தபோது நடந்த அசம்பாவிதம் தெரிந்ததாகவும் அக்கம்பக்கத்தினர் போலீஸில் கூறியுள்ளனர்.

வாக்குவாதம் முற்றி மணிகண்டன் அவரது மனைவி பிரியா(36), மற்றும் தரன்(10), தாஹன் (1), ஆகியோரை கொன்று விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணை, ஆய்வின்படி மணிகண்டன் மனைவியை கிரிக்கெட் மட்டையால் தலையில் அடித்துக் கொன்று விட்டு இரு குழந்தைகளையும் தலையணையால் அழுத்தியும் கொலை செய்து விட்டு, தானும் வேட்டியால் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலான் என துரைப்பாக்கம் போலீஸார் கூறுகின்றனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையில் போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக இராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104 க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.

SCROLL FOR NEXT