புதுச்சேரி: புதுச்சேரியில் 11 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி உள்ளது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது என புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் ஒற்றை இலக்கத்தில் இருந்த கரோனா தொற்று பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதேபோல் ஒமைக்ரான் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. கரோனா பாதிக்கப்பட்டு தனிமையில் இருப்பவர்களிடம் எஸ்-ஜீன்-டிராப் உமிழ்நீர் பரிசோதனை எடுக்கப்பட்டு, பெங்களூரில் உள்ள நிமான்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த மாதம் 7-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்ட மாதிரிகளின் முடிவு கடந்த 28-ம் தேதி வந்தது. அதில் 80 வயது முதியவர், 20 வயது இளம்பெண் உள்ளிட்ட 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருந்தது தெரியவந்தது. அவர்கள் இருவரும் குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில் கடந்த 5 நாட்களில் கரோனா பாதித்தவர்களுக்கு எஸ்-ஜீன்-டிராப் உமிழ்நீர் பரிசோதனை நடத்தியதில் புதுச்சேரி மாநிலத்தில் 11 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியபட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு கூறுகையில், ‘‘புதுச்சேரியில் 6 பேர், காரைக்காலில் 5 பேர் என 11 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி தென்பட்டுள்ளது. அவர்களின் உமிழ்நீர், ரத்த மாதிரிகள் பெங்களூரில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் முடிவு அடுத்த 10 நாட்களில் வெளிவரும்.’’என்றார்.
‘‘புதுச்சேரி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றுள்ளனர். இதில் பலரும் முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும் இருந்தனர். இதனால் தொற்று பாதிப்பு அதிகரிக்கலாம்.
கரோனாவுடன் ஒமைக்ரான் தொற்றும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. எனவே, வருங்காலங்களில் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடித்து, கைகளை அடிக்கடி கழுவுவதன் மூலம் கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தலாம்.’’என சுகாதாரத்துறையினர் தரப்பில் தெரிவித்தனர்.