சென்னை: விருதுநகர் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண உதவி வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிடப்பட்ட அறிக்கையில், "விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் களத்தூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் ஐந்து பேர் இறந்த துயரச் செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா மூன்று லட்சமும், காயமுற்றவர்களுக்கு தலா ஒரு லட்சமும் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
4 பேரின் உயிரைப் பறித்த விபத்து: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேற்று (ஜன.1) காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள எம்.மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் வழிவிடுமுருகன் (45). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று நத்தம்பட்டி அருகே உள்ள களத்தூரில் இயங்கி வருகிறது. சென்னையில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந்தப் பட்டாசு ஆலையில் பத்துக்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன.
நேற்று காலை வழக்கம்போல் இந்த ஆலையில் பட்டாசு உற்பத்தி தொடங்கியது. தொழிலாளர்கள் மருந்துக் கலவை செய்தபோது எதிர்பாராத விதமான உராய்வின் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் மருந்துக் கலவை அறை மற்றும் அருகில் இருந்த இரு அறைகள் இடிந்து தரைமட்டமாயின.
அப்போது அந்த அறையில் பணியாற்றிக் கொண்டிருந்த பி.பாறைபட்டியைச் சேர்ந்த வீரக்குமார் (45), மேட்டுப்பட்டியைச் சேர்ந்த குமார் (38), சேர்வைகாரன்பட்டியைச் சேர்ந்த பெரியசாமி (65) ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஜேசிபி இயந்திரம் மூலம் இடிபாடுகள் அகற்றப்பட்டு சடலங்கள் மீட்கப்பட்டன.
பலத்த காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பட்டியைச் சேர்ந்த முருகேசன் (38) உயிரிழந்தார்.
மேலும் இந்த விபத்தில் முனியாண்டி (35), வேல்முருகன் (35), கோபாலகிருஷ்ணன் (35), முனியசாமி (28), காளியப்பன் (65), அழகர்சாமி (33), கனகரத்தினம் (40) என்ற பெண் மற்றும் கோபாலகிருஷ்ணனின் 8 வயது மகன் மனோ அரவிந்தன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3 தனிப்படைகள்: இதற்கிடையில், பட்டாசு ஆலை உரிமையாளர்களைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேட்டுபட்டியை சேர்ந்த ஆலையின் உரிமையாளரும் முன்னாள் தேமுதிக கவுன்சிலருமான வழிவிடு முருகன் தலைமறைவான நிலையில் நத்தம்பட்டி காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்