நாகை அருகே பிளாஸ்டிக் நாற்காலிகள் விற்பனை செய்யும் தொழில் செய்துவந்த வடமாநிலத்தவரை நள்ளிரவில் தாக்கி, ரூ.6.35 லட்சம் ரொக்கத்தை பறித்துச் சென்ற 15 பேர் கொண்ட கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
மத்திய பிரதேச மாநிலம் மன்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஈஸ்வர் பஞ்சாரா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர், நாகை அருகே தெத்தி கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தனியார் இடத்தில் கொட்டகை அமைத்து தங்கி, பல்வேறு இடங்களுக்கு சரக்கு ஆட்டோவில் பிளாஸ்டிக் நாற்காலிகளைகொண்டு சென்று, விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் வழக்கம்போல தொழிலை முடித்துவிட்டு, இரவில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது, நள்ளிரவு 2 மணியளவில் திடீரென அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்த 15 பேர் கொண்டகும்பல், தொழிலாளர்கள் வைத்திருந்த பணத்தைக் கேட்டு சரமாரியாக தாக்கியது.
மேலும், அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் நாற்காலிகள், 2 சரக்கு ஆட்டோக்களையும் அடித்து நொறுக்கிய அந்தக் கும்பல், தொழிலாளர்களிடம் இருந்து ரூ.6.35 லட்சம் ரொக்கம் மற்றும் 6 செல்போன்களை பறித்துக் கொண்டு, அங்கிருந்து தப்பிச் சென்றது.
இந்த சம்பவத்தில் கொள்ளையர்கள் அடித்து நொறுக்கியதில் ரூ.2.50 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் நாற்காலிகள் சேதமடைந்தன. இதுகுறித்து ஈஸ்வர் பஞ்சாரா அளித்த புகாரின்பேரில், நாகூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.