நாகூர் ஆண்டவர் தர்காவில் ஜன.4-ம் தேதி தொடங்கும் கந்தூரி விழாவை முன்னிட்டு, தர்காவில் உள்ள 5 மினராக்களிலும் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நாகை மாவட்டம், நாகூரில் உள்ள பிரசித்திபெற்ற ஆண்டவர் தர்காவில் கந்தூரி விழா ஜன.4-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது.
சந்தனக்கூடு ஊர்வலம்
விழாவின் முக்கியநிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் ஜன.13-ம் தேதியும், ஆண்டவர் சன்னதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி ஜன.14-ம் தேதி அதிகாலையும் நடைபெற உள்ளன.
இந்நிலையில், கந்தூரி விழாவை முன்னிட்டு நாகூர் தர்காவில் உள்ள 5 மினராக்களிலும் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடைபெற்றது. நிகழ்ச்சியை தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாகிப் துவா ஓதி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அதிர்வேட்டுகள் முழங்க மங்கள வாத்தியம் இசைக்கப்பட்டது.
பொதுமக்கள் பங்கேற்பு
பின்னர், முதலில் சாகிபு மினராவில் பாய்மரம் ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, பெரிய மினரா மற்றும் தலைமாட்டு மினரா, முதுபக் மினரா, ஓட்டு மினரா ஆகியவற்றிலும் பாய்மரம் ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஜாதி, மத பேதமின்றி திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் குழு மற்றும் தர்கா தற்காலிக நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.