புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே துப்பாக்கி சுடும்பயிற்சியின்போது குண்டு பாய்ந்துசிறுவன் காயமடைந்த சம்பவத்தில், துப்பாக்கியால் சுட்டது யார் என்பது குறித்து சிஐஎஸ்எப் மற்றும் தமிழக போலீஸாரிடையே இருவேறு கருத்து நிலவுகிறது.
நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் (சிஐஎஸ்எப்) மற்றும் தமிழக போலீஸ் கடந்த டிச.29, 30-ம்தேதிகளில் பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், டிச.30-ம் தேதிஅங்கிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் வீட்டில் இருந்த கே.புகழேந்தி(11) என்ற சிறுவன் தலையில் குண்டு பாய்ந்தது. பலத்த காயமடைந்த சிறுவனுக்கு, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சையின் மூலம் குண்டு அகற்றப்பட்டது. தொடர்ந்து சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் மற்றும் போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக இலுப்பூர் கோட்டாட்சியர் எம்.எஸ்.தண்டாயுதபாணி முன்னிலையில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும், தமிழக போலீஸாரும் நேற்று முன்தினம் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது, சிறுவனை தாங்கள் துப்பாக்கியால் சுடவில்லை என இரு தரப்பினருமே கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை (ஜன.3) பசுமலைப்பட்டியில் நேரில் ஆய்வு செய்த பிறகு, ஆட்சியர் கவிதா ராமுவிடம் கோட்டாட்சியர் அறிக்கை அளிக்க உள்ளார்.
மேலும், சிறுவனின் தலையில்பாய்ந்த குண்டு அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டுள்ள நிலையில், அந்த குண்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட பிறகே, அது மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் பயன்படுத்தியதா அல்லது மத்திய மண்டல போலீஸார் பயன்படுத்தியதா என்பது தெரியவரும்.
இந்த சம்பவம் குறித்து கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ எம்.சின்னதுரை கூறியதாவது: இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் யாரும் உரியவிளக்கத்தை அளிக்க மறுத்து வருகின்றனர். முதலில் 2 கி.மீ தொலைவுக்கு குண்டு செல்லாது என்பதால் சிறுவனே துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்துக்கு வந்திருக்க வேண்டும் என்றனர்.
அதன்பிறகு, சிறுவன் வீட்டில் இருந்தது உறுதியானதும், நாங்கள் சுடவில்லை என சிஐஎஸ்எப் தரப்பும், தமிழக போலீஸாரும் கூறி வருகின்றனர். துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் அனுமதி அளிப்பது குறித்து தனக்கு ஏதும் தெரியாது என்று ஆட்சியர் கூறுகிறார். துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்துக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தற்காலிக தடை விதித்த பிறகு யார் அனுமதி அளித்தது என்ற கேள்விக்கும் பதில் இல்லை. எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றார்.