கோவையில் வீட்டிலிருந்து எடுத்த ரூ.21 லட்சம் தொகை, 22 பவுன் நகையுடன் மாயமான சிறுவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியருக்கு 14 வயதில் மகன் உள்ளார். இவர், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன், தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். நண்பர்களான இவர்கள் இருவரும் கடந்த 30-ம் தேதி வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அதன் பின்னர், இருவரும் வீடு திரும்பவில்லை. இருவரது பெற்றோரும் பல இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.
இதற்கிடையே 14 வயது சிறுவனின் தந்தை, தன் வீட்டுக்குச் சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த ரூ.21 லட்சம் ரொக்கம், 22 பவுன் நகை ஆகியவற்றை காணவில்லை. அவரது விசாரணையில், நகை, பணத்தை அவரது மகன் எடுத்துக் கொண்டு, நண்பரான 13 வயது சிறுவனுடன் இணைந்து வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது. இதையடுத்து 14 வயது சிறுவனின் தந்தை போத்தனூர் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார், மாயமானோர் பிரிவில் வழக்குப்பதிந்து சிறுவர்களை தேடி வருகின்றனர்.