குன்னூரில் கடும் பனிமூட்டம் காரணமாக பள்ளத்தில் வாகனம்கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான அருவங்காடு, பாய்ஸ் கம்பெனி, காட்டேரி, வெலிங்டன் பகுதிகளில் நேற்று காலை முதல் காலநிலை மாற்றத்தால், சாரல் மழையுடன் கடும் மேகமூட்டம் நிலவியது. எதிரே வரும் வாகனங்கள்கூட தெரியாத அளவுக்கு கடும் மேகமூட்டம் நிலவியதால், குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகளும், சுற்றுலா பயணிகளும் சிரமப்பட்டனர். முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி வாகனங்களை இயக்கினர்.
மேகமூட்டத்துடன் கடும்குளிரும் நிலவுவதால் மக்களின்இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை நோக்கி நேற்று காலை வந்த காய்கறி வாகனம், பனிமூட்டம் காரணமாக காட்டேரி பூங்கா அருகே சாலையிலிருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதிர்ஷ்டவசமாக, அப்பகுதியில் நடைபெற்று வரும் தடுப்புச்சுவர் கட்டுமானத்தில் மோதி வாகனம் நின்றது. ஓட்டுநர் உட்பட இருவரும் காயமின்றி உயிர் தப்பினர்.