தஞ்சாவூரில் உள்ள பார்ஸ்டல் பள்ளியிலிருந்து இளம் கைதி நேற்று காலை தப்பியோடினார்.
திருச்சி ஸ்ரீரங்கம் சிவன் கோயில் தெருவைச் சேர்ந்த ஏழுமலை மகன் நாகராஜன்(20). திருச்சி ஏர்போர்ட் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட நாகராஜன், தஞ்சை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பார்ஸ்டல் பள்ளியில் அடைக்கப்பட்டார். இங்கு 18 முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளம் குற்றவாளிகள் அடைத்து வைக்கப்படுகின்ற னர்.
இந்நிலையில், நேற்று காலை கைதிகள் அனைவரும் குளிக்க அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், நீண்ட நேரமாகியும் நாகராஜன் வராததால், சக கைதிகள் இதுகுறித்து சிறைக் காவலர்களிடம் தெரிவித்துள்ளனர். சிறைக் காவலர்கள் மற்றும் தஞ்சை நகர போலீஸார் பல இடங்களில் தேடியும், நாகராஜன் கிடைக்கவில்லை. அவர் அங்கிருந்து தப்பிவிட்டது உறுதிசெய்யப்பட்டது.
தகவலறிந்து வந்த தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.என்.மயில்வாகனன், சிறைக் கண்காணிப்பாளர் ரவிந்தீரன் ஆகியோர், சிறைக் கைதிகள் மற்றும் காவலர்களிடம் விசாரணை நடத்தினர். நாகராஜனைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.