தமிழகம்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணிகள் தீவிரம்: 144 இடங்களில் மழைநீர் வடியவில்லை

செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் தேங்கிஉள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகள் 3-வது நாளாக நேற்றும் நடைபெற்றன. இன்னும் 144 இடங்களில் நீர் வடியவில்லை. அங்கு ராட்சத இயந்திரங்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணிகளை மாநராட்சி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

சென்னையில் கடந்த 30-ம் தேதிஎதிர்பாராத வகையில் அதிகனமழை பெய்தது. மயிலாப்பூரில் 24 செமீ, நுங்கம்பாக்கத்தில் 23 செமீ மழை பதிவானது. தொடர்ந்து நேற்றும் மழை நீடித்தது.

இதனால், ஆழ்வார்ப்பேட்டை, திருவல்லிக்கேணி, தியாகராய நகர், புளியந்தோப்பு, அசோக்நகர், கே.கே.நகர், விருகம்பாக்கம், மேற்கு மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

பல இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து வெளியேறியதால், துர்நாற்றம் வீசியது. தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகள் 3-வது நாளாக நேற்றும் நடைபெற்றன.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "தற்போதைய நிலவரப்படி பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிந்துவிட்டது. 144 இடங்களில் நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியில் 370 ராட்சத நீர் இறைக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

16,000 மருத்துவ முகாம்கள்

மழை பாதிப்பு தொடர்பாக கடந்த 3 நாட்களில் 1,800 புகார்கள் வந்துள்ளன. அவற்றில் பெரும்பாலான புகார்கள் தீர்க்கப்பட்டு, 294 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

3 நாட்களில் 16 ஆயிரம் இடங்களில் நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. நிலையான மருத்துவ முகாம்களும் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டன. இவற்றில் 8 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். ஓரிரு தினங்களில் அனைத்துஇடங்களிலும் நீர் வடிந்துவிடும்” என்றனர்.

SCROLL FOR NEXT