திருவள்ளூர் அருகே வெந்நீர் பட்டு படுகாயம் அடைந்த 3 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
திருவள்ளூரை அடுத்த நாராயணபுரத்தைச் சேர்ந்த பச்சையப்பனின் 3 வயது பெண் குழந்தை நித்யஸ்ரீ. கடந்த மாதம் 2-ம் தேதி வீட்டில் இருந்த வெந்நீர் பாத்திரம், நித்யஸ்ரீ மீது தவறி விழுந்து விட்டது. இதில், குழந்தைக்கு வலது காலில் இருந்து வயிற்றுப் பகுதி வரை வெந்து புண்ணாகி விட்டது.
உடனடியாக, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பெற்று வந்த குழந்தையை, மேல் சிகிச்சைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர்.
கடந்த 6 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த நித்யஸ்ரீ சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து, திருவள்ளூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.