திருவொற்றியூரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப் பகுதியில் 28 வீடுகள் இடிந்த நிலையில், அங்கு உள்ள சிதிலமடைந்த வீடுகள் உட்பட்ட 336 பயனாளிகளுக்கு அதே இடத்தில் வீடு கட்டி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
திருவொற்றியூர் கிராமத் தெருவில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு திட்டப் பகுதி உள்ளது. அதில் 336 வீடுகள் இருந்தன. அந்தப் பகுதியில் ஒரு குடியிருப்பில் இருந்த 28 வீடுகள், கடந்த 27-ம் தேதி இடிந்து விழுந்தன. அதை ஒட்டியுள்ள 20 வீடுகளையும் இடிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் அந்தப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளும் சிதிலமடைந்து இருப்பதால், அனைத்து வீடுகளையும் இடித்துவிட்டு அதே இடத்தில் வீடுகள் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகளும் பயனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி,அதே இடத்தில் வீடு கட்டித் தரப்படும் என உறுதி அளித்துள்ளனர். இவர்களுக்கான வாழ்வாதாரப் படியாக ரூ.24 ஆயிரம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வரும் வாரத்தில் வழங்க இருப்பதாக அவ்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து பயனாளிகள் தங்கள் உடைமைகளுடன் புறப்பட்டு, வாடகை வீடுகளில் தங்கியுள்ளனர். இடிந்தபகுதியில் மீட்புப் பணிகளும் முடிவடைந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கி இருந்த பணம், நகை மற்றும் ஆவணங்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, உரியவர்களிடம் தீயணைப்புத் துறையினர் ஒப்படைத்துள்ளனர்.