தமிழகம்

பக்கிங்ஹாம் கால்வாயை சீரமைக்க கோரி வழக்கு: பசுமை தீர்ப்பாயம் புதிய உத்தரவு

செய்திப்பிரிவு

பக்கிங்ஹாம் கால்வாயை சீரமைக்கக் கோரி தொடர்ந்த வழக்கில் தமிழக பொதுப்பணி துறை தலைமைப் பொறியாளர், சென்னை குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குநர் ஆகியோர் ஆஜராக வேண்டும்’ என தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயை சீரமைக்க உத்தரவிடக் கோரி ஜவகர்லால் சண்முகம் என்பவர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த தீர்ப்பாயம், ‘சென்னை மாநகராட்சி தாக்கல் செய்த பதில் மனு திருப்தியில்லை. சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் பொதுப்பணி துறை தலைமை பொறியாளர் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என உத்தர விட்டது.

இதையடுத்து, சென்னை மாநகராட்சி ஆணையர், பொதுப்பணி துறை தலைமை பொறியாளர் ஆகியோர் பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த ஜனவரி மாதம் 8-ம் தேதி ஆஜராகி விளக்கம் அளித்தனர். அந்த விளக்கத்தை அறிக்கையாக அளிக்கும்படி தீர்ப்பாய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், நீதிபதி பி.ஜோதி மணி, உறுப்பினர் ஆர்.நாகேந்திரன் அடங்கிய முதன்மை அமர்வு முன் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘பொதுப்பணி துறை அறிக்கைத் தாக்கல் செய்தது. அதில், ‘பக்கிங்ஹாம் கால்வாயின், தெற்கு மற்றும் வடக்கு பகுதியில் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பக்கிங் ஹாம் கால்வாயில் நிலவும் அசுத்தம் குறித்து மனுதாரர் சில புகைப் படங்களை நீதிபதிகளிடம் காண் பித்தார். இதையடுத்து, நீதிபதிகள் பொதுப்பணித் துறை தாக்கல் செய்த அறிக்கை ஏற்புடையதாக இல்லை. இதனால், தமிழக பொதுப்பணி துறை தலைமை பொறியாளர், சென்னை குடிநீர் வடிகால் வாரிய இயக்குநர் ஆகியோர் வரும் 16-ம் தேதி பசுமை தீர்ப்பாயத்தில் நேரில் ஆஜராக வேண்டும்’ என உத்தரவிட்டனர். இதையடுத்து விசாரணை நாளைக்கு (புதன்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT