தமிழகம்

ஆர்.எஸ்.எஸ். பயிற்சி விவகாரம்; காவல்துறை துணை ஆணையருடன் வாக்குவாதம்: ஆர்.எஸ்.எஸ் 5 பேர் மீது வழக்குப் பதிவு

டி.ஜி.ரகுபதி

கோவை: காவல்துறை துணை ஆணையர் உள்ளிட்டோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட, ஆர்.எஸ்.எஸ் மாவட்டச் செயலர் உட்பட 5 பேர் மீது பீளமேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவை விளாங்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நடந்து வருகிறது. இப்பயிற்சி முகாமுக்கு எதிர்ப்பு தெரிவித்து சில தினங்களுக்கு முன்னர் தபெதிக உள்ளிட்ட திராவிட இயக்கங்கள் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. அவர்களைக் காவலர்கள் கைது செய்தனர். இப்பயிற்சி முகாமுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று (டிச 31) நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பயிற்சி முகாம் நடக்கும் பள்ளி அருகே, மாநகரக் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணிகளைப் பார்வையிட, மாநகரக் காவல்துறையின் வடக்கு உட்கோட்ட துணை ஆணையர் ஜெயச்சந்திரன் அங்கு வந்தார்.

அப்போது பள்ளியின் வாசலில், ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து அமைப்பினர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை வளாகத்துக்குள் செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் உள்ளே செல்ல மறுத்து, நுழைவாயிலில் நின்றபடி, துணை ஆணையரிடமும், அங்கிருந்த பிற காவலர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கும், எதிர்த்தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் ராஜ்குமார், பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், ‘‘அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட, ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த மாவட்டச் செயலர் முருகன், பாஜகவின் காளிதாஸ், இந்து முன்னணி வடக்கு மாவட்டச் செயலர் கோவிந்தன், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அருண், கருப்பசாமி ஆகிய 5 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியிருந்தார். அதன் பேரில், பீளமேடு காவல்துறையினர் அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், சட்ட விரோதமாக ஒன்றுகூடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் மேற்கண்ட 5 பேர் மீதும் நேற்று (டிச.31) வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT