படங்கள்: எஸ்.எஸ்.குமார். 
தமிழகம்

புதுச்சேரியில் களை கட்டிய புத்தாண்டுக் கொண்டாட்டம்: கோயில்கள், தேவாலயங்களில் மக்கள் சிறப்பு வழிபாடு  

அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரியில் புத்தாண்டுக் கொண்ட்டாட்டம் களை கட்டிய நிலையில் கோயில்கள், தேவாலயங்களில் மக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

கரோனா, ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம், கர்நாடகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. புதுச்சேரியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு அரசு அனுமதி அளித்தது.

அதன்படி ஓட்டல்கள், ரிசார்ட்டுகளில் கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்த மாவட்ட நிர்வாகம் விதிமுறைகளை விதித்தது. இந்த நிலையில் கரோனா பரவலைக் காரணம் காட்டி புத்தாண்டு கொண்டாடத் தடை செய்யக் கோரி வழக்குத் தொடரடப்பட்டது. இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் திரை பிரபலங்களுக்குத் தடை, மதுக்கடைகளைத் திறக்க நேர கட்டுப்பாடு போன்ற நிபந்தனைகளை வலியுறுத்தியது.

குவிந்த சுற்றுலாப் பயணிகள்

புத்தாண்டைக் கொண்டாட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வந்து குவிந்தனர். இதையொட்டி புதுச்சேரி எல்லைகளில் சுகாதாரத்துறை சார்பில் கரோனா தடுப்பூசி சான்றிதழைப் பரிசோதித்த பிறகே அவர்களை அனுமதித்தனர். தடுப்பூசி போடாதவர்களுக்கு அந்த இடத்திலேயே தடுப்பூசி போடப்பட்டது.

பல ஓட்டல்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடற்கரை சாலை முழுவதும் வண்ண விளக்குகளால் ஆன தோரணங்கள் கட்டப்பட்டு இரவில் ஜொலித்தன. ஓட்டல்கள் மற்றும் முக்கிய அரசுக் கட்டிடங்களிலும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு விழாக்கோலம் பூண்டு இருந்தது.

புதுச்சேரி கடற்கரை சாலையில் புத்தாண்டை கொண்டாட திறண்டிருந்த மக்கள் கூட்டம்.படம்.எம்.சாம்ராஜ்

வாழ்த்து மழையால் நனைந்த கடற்கரை சாலை

நேற்று இரவு புதுச்சேரி கடற்கரையில் வெளியூர் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் அதிக அளவில் திரண்டனர். நள்ளிரவு காந்தி சிலை அருகே மக்கள் கூட்டம் அலை மோதியதால் புத்தாண்டுக் கொண்டாட்டம் களை கட்டியது. கரோனா, ஒமைக்ரான் பரவலைத் தடுக்கும் விதமாக மக்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று போலீஸார் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நள்ளிரவு 12 மணி ஆனதும் கடற்கரையில் கூடியிருந்தவர்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். உரத்த குரலில் ‘ஹேப்பி நியூ இயர்’ எனக் கத்தியபடி புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர். இளைஞர் பட்டாளங்கள் நடனமாடியும், ‘கேக்’ மற்றும் இனிப்புகள் வழங்கியும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இதனால் கடற்கரை சாலை வாழ்த்து மழையால் நனைந்தது.

சிறப்புப் பிரார்த்தனை

புத்தாண்டுப் பிறப்பையொட்டி புதுச்சேரியில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. மிஷன் வீதியிலுள்ள ஜென்மராக்கினி மாதா பேராலயம், தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா, நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை ஆலயம், அரியாங்குப்பம் ஆரோக்கிய அன்னை, வில்லியனூர் லூர்தன்னை உள்ளிட்ட தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்புப் பிரார்த்தனை நடத்தப்பட்டது.

இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதேபோல் இன்று (ஜன. 1) புத்தாண்டையொட்டி கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் தங்கக் கவசத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமியை தரிசித்தனர்.

இதேபோல் காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர், வரதராஜபெருமாள், வில்லியனூர் திருக்காமீஸ்வரர், கதிர்காமம் முருகன் கோயில், பாகூர் மூலநாத சுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு வழிபாடு, அபிஷேகம் நடைபெற்றது. புத்தாண்டையொட்டி புதுச்சேரி சுற்றுலாத் தளங்களும் மக்கள் கூட்டத்தால் நிறைந்து காணப்பட்டன.

புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காக வாகன நெரிசலை சமாளிக்க புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. கடற்கரை சாலை மற்றும் ஒயிட் டவுனில் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக நகரின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள், சுற்றுலாப் பயணிகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

SCROLL FOR NEXT