தமிழகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: தொழிலாளர்கள் 4 பேர் பலி

இ.மணிகண்டன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள எம்.மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் வழிவிடுமுருகன் (45). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று நத்தம்பட்டி அருகே உள்ள களத்தூரில் இயங்கி வருகிறது. சென்னையில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந்தப் பட்டாசு ஆலையில் பத்துக்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன.

இன்று காலை வழக்கம்போல் இந்த ஆலையில் பட்டாசு உற்பத்தி தொடங்கியது. தொழிலாளர்கள் மருந்துக் கலவை செய்தபோது எதிர்பாராத விதமான உராய்வின் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் மருந்துக் கலவை அறை மற்றும் அருகில் இருந்த இரு அறைகள் இடிந்து தரைமட்டமாயின.

அப்போது அந்த அறையில் பணியாற்றிக் கொண்டிருந்த பி.பாறைபட்டியைச் சேர்ந்த வீரக்குமார் (45), மேட்டுப்பட்டியைச் சேர்ந்த குமார் (38), சேர்வைகாரன்பட்டியைச் சேர்ந்த பெரியசாமி (65) ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஜேசிபி எந்திரம் மூலம் இடிபாடுகள் அகற்றப்பட்டு சடலங்கள் மீட்கப்பட்டன.

பலத்த காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பட்டியைச் சேர்ந்த முருகேசன் (38) உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் முனியாண்டி (35), வேல்முருகன் (35), கோபாலகிருஷ்ணன் (35), முனியசாமி (28), காளியப்பன் (65), அழகர்சாமி (33), கனகரத்தினம் (40) என்ற பெண் மற்றும் கோபாலகிருஷ்ணனின் 8 வயது மகன் மனோ அரவிந்தன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து தகவலறிந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடத்தில் பிஐஜி காமினி, மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், எஸ்.பி. மனோகர், கூடுதல் எஸ்.பி. மணிவண்ணன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் விபத்து குறித்து நத்தம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புத்தாண்டு அன்று ஏற்பட்ட இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT