தமிழகம்

சென்னை, புறநகர், டெல்டா உட்பட 10 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, டெல்டா மாவட்டங்கள் உட்பட 10 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

தமிழக கடற்கரையை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஜன.1-ம் தேதி (இன்று) கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

2-ம் தேதி (நாளை) கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். 3-ம் தேதி தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 4-ம் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

31-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மெரினா டிஜிபி அலுவலகத்தில் 24 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் ஓராண்டில் வழக்கமாக 93 செ.மீ. மழை பெய்ய வேண்டும். 2021-ம் ஆண்டில் 137 செ.மீ.மழை கிடைத்துள்ளது. இது வழக்கத்தைவிட 47 சதவீதம் அதிகம். சென்னையில் வழக்கமாக 133 செ.மீ. மழை கிடைக்கும். 2021-ல் 210 செ.மீ. கிடைத்துள்ளது. இது வழக்கத்தைவிட 58 சதவீதம் அதிகம். கடந்த 2015-ல் 205 செ.மீ. மழை கிடைத்தது.

தமிழகத்துக்கு டிசம்பரில் 9 செ.மீ. மழை கிடைக்க வேண்டும். ஆனால் 6 செ.மீ. மட்டுமே கிடைத்துள்ளது. இது வழக்கத்தைவிட 35 சதவீதம் குறைவு. சென்னையில் டிசம்பர் மாதத்தில் 16 செ.மீ. மழை கிடைக்கும். ஆனால், கடந்தடிசம்பரில் 21 செ.மீ. மழை கிடைத்துள்ளது. இது வழக்கத்தைவிட 29 சதவீதம் அதிகம். கடந்த 2015-ல் சென்னையில் 44 செ.மீ. மழை பெய்தது. இது வழக்கத்தைவிட 184 சதவீதம் அதிகம்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

குமரிக்கடல் பகுதிகளில் ஜன.1-ம் தேதி (இன்று) மணிக்கு 35 - 45 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே அப்பகுதிகளுக்கு மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். 2, 3, 4-ம் தேதிகளில் 40 - 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT