அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கோவையில் பதுங்கியுள்ளாரா என தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் பால்வளத் துறை அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆவின் மற்றும் அரசுத்துறைகளில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பலரிடம் ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கே.டி.ராஜேந்திர பாலாஜியை 8 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.
அவரை பிடிக்க, அவரது உறவினர்கள், நெருங்கிய நட்பு வட்டத்தினர், நெருங்கிய கட்சிப் பிரமுகர்கள் உள்ளிட்டோரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு கோவையில் நெருங்கிய நட்பு வட்டத்தினர் இருப்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. கடந்த ஆண்டு கோவையில் நடந்த சில தனியார் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதனால் அவர் கோவையில் பதுங்கியுள்ளாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் ராம்ராஜ், உதவி ஆய்வாளர் பாலமுரளி உள்ளிட்டோர் அடங்கிய 8 பேர் கொண்ட விருதுநகர் தனிப்படை போலீஸார் கோவையில் தங்கி, கடந்த சில நாட்களாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதியில், தொண்டாமுத்தூர் அருகேயுள்ள நல்லூர் வயல், குளத்துப்பாளையம், ஓணாப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ராஜேந்திரபாலாஜிக்கு நெருக்கமானவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும், தனிப்படை போலீஸார் கோவையில் முகாமிட்டு ராஜேந்திர பாலாஜியை தேடும் பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையே தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவிதினகரன், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஓடி ஒளியக்கூடாது, தைரியமாக சட்டத்தை எதிர்கொள்ள வேண்டும். அதுதான் அரசியலுக்கு நல்லது என்று தெரிவித்தார்.