தமிழகம்

கன்னியாகுமரி, குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

செய்திப்பிரிவு

கன்னியாகுமரியில் புத்தாண்டு தினத்தில் சுற்றுலாப் பயணிகள்கூடுவது வழக்கம். ஆண்டின்கடைசி சூரிய அஸ்தமனம், புத்தாண்டின் முதல் சூரிய உதயம் ஆகியவற்றைக் காண பல்லாயிரக்கணக்கானோர் திரள்வர். கரோனா பரவலால் கடந்த இரு ஆண்டுகளாக கன்னியாகுமரிக்கு பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டும் நேற்று முதல் நாளை (2-ம் தேதி) வரை கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுபோல், குற்றாலம் அருவிகளில் குளிக்க நேற்று தொடங்கி நாளை (2-ம்தேதி) வரை 3 நாட்கள் தடை விதித்து தென்காசி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த தடை நேற்று அமலுக்கு வந்ததையொட்டி குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவி ஆகிய பகுதிகளில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அருவிகளில் பார்வையிடச் செல்லவும் யாரும் அனுமதிக்கப்படவில்லை. குற்றாலம் வெறிச்சோடி காணப்பட்டது.

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்று (ஜன.1) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் நேற்றே ஏராளமான பக்தர்கள்திருச்செந்தூரில் குவிந்தனர். நேற்றும், இன்றும் கோயில் கடற்கரைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT