தமிழகம்

பாமகவுக்கு மாம்பழச் சின்னம் ஒதுக்கீடு: ஜி.கே.மணி

செய்திப்பிரிவு

பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழம் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பதாக பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியை சந்தித்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு தொடர்பான ஒப்புதல் கடிதத்தைப் பெற்றிருக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், புதுச்சேரி 30 தொகுதிகளிலும் பாமக மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுவதற்கான தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளது. இது எங்களுக்கு ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னம்தான். இடையிலே பிரச்சினை ஏற்பட்டது. இப்போது அப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு மீண்டும் மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

தேர்தல் அறிக்கையும், வேட்பாளர் பட்டியலும் தயாராகிவிட்டது. விரைவில் அவை வெளியிடப்படும். ஓராண்டுக்கு முன்பே பாமக தனது முதல்வர் வேட்பாளரை அறிவித்தது. அதன்பிறகு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எது எதுவெல்லாம் தடையாக இருக்கிறதோ. அதனை நீக்க பாமக என்ன செய்யப் போகிறது? என்று எங்கள் முதல்வர் வேட்பாளர்அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு முழுவதும் சென்று எடுத்துரைத்தார்.

இத்தேர்தலில் மாற்ற வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். பூரண மதுவிலக்கு வேண்டும் என்றும், லஞ்சம், ஊழல் அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்றும் பெண்கள், படித்தவர்கள், இளைஞர்கள், நடுநிலையாளர்கள் விரும்புகின்றனர். மக்கள் பலம் எங்களுக்கு இருக்கிறது. மக்களை நம்பி தன்னம்பிக்கையோட இத்தேர்தலை பாமக சந்திக்கிறது.

இவ்வாறு ஜி.கே.மணி கூறினார்.

SCROLL FOR NEXT