காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 68-வது பீடாதிபதியாக இருந்தவர் மஹா பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவரது 28-வது ஆராதனை மஹோத்சவம் கடந்த 28-ம் தேதி தொடங்கியது.
இந்த விழாவையொட்டி வேதபாராயணம், இன்னிசை நிகழ்ச்சிகள், ஆன்மிகச் சொற்பொழிவுகள் ஆகியவை நடைபெற்றன.
விழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம் வேத விற்பன்னர்கள் மூலம் ஏகாதச ருத்ர ஜெபமும், 12 கலசங்கள் வைத்து ஹோமமும் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து சங்கர மடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மகா பெரியவர் அதிஷ்டானத்தில் கலசாபிஷேகம் செய்தார்.
பின்னர் ஏகாம்பரநாதர் கோயில் தெப்பக்குளத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் மங்கள மேள வாத்தியங்களுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். பின்னர் மஹா பெரியவர் மற்றும் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்களில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. இந்த அபிஷேகத்தை ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செய்து வைத்தார்.
வேத விற்பன்னர்களின் 3 நாட்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியும், 120-க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்களின் பாராயணமும் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து அவர்களுக்கு ஸ்ரீ விஜயேந்திரர் சன்மானம் வழங்கினார். இந்த விழாவில் சங்கர மடத்தின் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் முடிவில் தீர்த்தநாராயண பூஜை நடைபெற்றது.
திருப்பதி தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி, கர்நாடக மாநிலம் எடநீர் மடத்தின் பீடாதிபதி சச்சிதானந்த பாரதி சுவாமிகள், சொர்ணஹள்ளி மடத்தின் பீடாதிபதி கங்காதரேந்திர சுவாமிகள், எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷையன் உட்பட பலர் பங்கேற்றனர்.