சென்னையில் மழை பாதிப்பு மீட்புப் பணிகளில், மாநகராட்சி மற்றும் பல்வேறு துறை ஊழியர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு போலீஸாருக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் கடந்த மாதம் வடகிழக்குப் பருவ மழை கொட்டியபோது, மாநகராட்சி உள்ளிட்ட பிற துறையினருடன் ஒருங்கிணைந்து போலீஸார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, மழை விபத்துகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கவும், அவரச அழைப்பை எதிர்கொண்டு, பாதிப்பு ஏற்பட்ட இடத்துக்குச் சென்று உதவிகள் செய்யவும் வசதியாக, 13 காவல் பேரிடர் மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டந.
இவை ஆயுதப் படை காவல் அதிகாரிகள் மேற்பார்வையில், உதவி ஆய்வாளர்கள் தலைமையில், ஆயுதப்படைக் காவலர்களைக் கொண்டு அமைக்கப்பட்டன.
சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களுக்கும் தலா ஒரு சிறப்பு காவல் பேரிடர் மீட்புக் குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டு, மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். மேலும் ஒரு மீட்புக் குழு, சென்னை ராஜரத்தினம் ஆயுதப்படை மைதானத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக சென்னையில் கனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மேலும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது.
சாலைகளிலும் தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, மாநகராட்சி மற்றும் பல்வேறு துறையினர், மழை பாதிப்பு மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மீட்புப் பணியில் ஈடுபடும் துறையினருடன் இணைந்து செயல்படுமாறு, காவல் பேரிடர் மீட்புக் குழுவினருக்கு மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, வடகிழக்குப் பருவமழையின்போது மீட்புப் பணிகளில் ஈடுபட்ட காவல் பேரிடர் மீட்புக் குழுவினர், தற்போதைய மழை பாதிப்பு மீட்புப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், மழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபடுதல், மோட்டார் மூலம் தண்ணீரை அகற்றுதல், பாதிக்கப்பட்ட மக்களை தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கவைத்தல், உணவு மற்றும் குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பணிகளில் காவல் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபடுகின்றனர்.
சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், போக்குவரத்துப் போலீஸார் களப் பணியாற்ற வேண்டும் என்றும் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.