புனரமைக்கப்பட்டு வர்ணங்கள் தீட்டப்பட்ட ராஜ கோபுரம். 
தமிழகம்

புதைவட கம்பிகளால் மின்கம்பம் இல்லாத வளாகமாக மாற்றம்: புதுப்பொலிவு பெறுகிறது விருத்தகிரீஸ்வரர் கோயில்: குடமுழுக்கு விழாவுக்கு ஆயத்தமாகிறது

ந.முருகவேல்

தமிழகத்தில் முதன்முறையாக புதைவட கம்பிகளால் மின்கம்பம் இல்லாத கோயில் வளாகமாக விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் மாறியுள்ளது.

'விருத்தகிரீஸ்வரர்' என்ற பெயரால் அழைக்கப்படும் விருத்தாச லம் பழமலை நாதர் கோயில் இந்தியாவின் முதல் சிவாலயமாக கருதப்படுகிறது. விநாயகருக்கு இக்கோயிலில் ஆழத்து விநாயகர் எனும் 2-வது படைவீடு உள்ளது. இக்கோயிலில் கடந்த 2002 ஏப்ரல் 29-ம் தேதி குடமுழுக்கு நடை பெற்றது.

கடந்த 3 ஆண்டுகளாக பொதுமக்கள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையின் பங்களிப்போடு ரூ.3 கோடி மதிப்பீட்டில் திருப் பணிகள் நடைபெறுகிறது.புனரமைப்பு பணிகளில் முதற்கட்ட மாக கோயில் வளாகம் முழுவதுமிருந்த மின் கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன. தற்போது புதைவட கம்பிகளால் மிக நேர்த்தியாக மின் இணைப்புகள் கொடுக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதிக்கும் தனித் தனியாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டு, தானியங்கி மின்னுற்பத்தி இயந்திரமும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக கோயில் களிலேயே இங்கு தான் முதன்முறையாக புதைவட கம்பிகள் மூலம் மின் இணைப்பு தற்போது வழங்கப் பட்டுள்ளது.

இக்கோயில் வளாகத்தில் தண்ணீர் தேங்காத வண்ணம் ஓய்வு பெற்ற பொதுப்பணித் துறை அலுவலர்களைக் கொண்டு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதனால் மழைநீர் 5 தீர்த்த குளங்களுக்கும் செல்லும்வகையில் வடிகால் வசதி அமைக் கப்பட்டுள்ளது. பக்தர்களுக்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை மற்றும் ஐதராபாத் ஐஐடியைச் சேர்ந்த நிபுணர்கள் குழு அருண்மேனன் தலைமையில் கோயிலை ஆய்வு செய்தனர். அவர்களது தொழில் நுட்ப ஆலோசனையின்படி, மழைக்காலத்தில் கோயிலில் தண்ணீர் ஒழுகாத வகையில் 20 ஆயிரம் சதுர அடிக்கு தட்டோடு பதிக்கப் பட்டுள்ளது. 20 ஆயிரம் சதுர அடிக்கு கோயில் சுற்றுப்பிரகாரம் முழுவதும் கருங்கல் பதிக்கப் பட்டுள்ளது.

கோயில் வளாகத்தினுள் வளர்ந் திருக்கும் 2,500 ஆண்டுகள் பழமையான வன்னிமரம், கடந்த 2005-ம் ஆண்டு புயலின் போது சாய்ந்து விட்டது. அந்த மரத்தை பாதுகாக்கும் வகையில் ஐஐடி நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் மரத்திற்கு தாங்கு இரும்புச் சட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இக்கோயிலைச் சுற்றியுள்ளஆக்கிரமிப்புகளை அகற்றியுள் ளனர். இதுதொடர்பாக 170 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்குச் சொந்தமான 15 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 59 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கோயில் வளாகத்தைச் சுற்றிஅமைக்கப்பட்டிருந்த அசைவ உணவகங்கள் அகற்றப்பட்டுள்ளன. இதனால் கோயிலின் முழுவளாகத் தையும் பக்தர்களின் பார்வைக்கு கொண்டு வரும் பணியில் உள்ளூர் சிவனடியார்களுடன் இணைந்து இந்து சமய அறநிலையத் துறை யினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கடந்த 1993-ம் ஆண்டு கோயிலின் 3 தேர்கள் தீ விபத்தில் சிக்கி சேதமடைந்தன. அந்த தேர்களும் புனரமைக்கப்பட்டு, தேர் நிறுத்துமிடத்தை சுற்றியிருந்த ஆக்கிரமிப்புகளையும் அகற்றி வருகின்றனர்.

கோயில் நிலைக் கதவுகளில் மரச் சிற்பங்கள் மூலம் கோயிலின்வரலாற்றை பக்தர்கள் அறியும்வகையில் வடிவமைத்தி ருப்பதோடு, சாமி சிலைகளை மக்கள் அறிந்து கொள்ள ஏதுவாக பித்தளை தகடுகள் பதித்து அடையாளப்படுத்தி வருகின்றனர். கோயில் வளாகத்தினுள்ளேயே நூலகம் அமைய உள்ளது. இதன் மூலம் கோயில் குறித்த சிறப்பை அதன் தலத்திலேயே அறிந்து புரிந்துகொள்ள முடியும். இதுதொடர்பான பக்தர்களின் தகவல்களையும் திரட்டி நூலாக வெளியிட முடிவும் செய்துள்ளனர்.

கோயிலின் நான்கு புறமும் 7 நிலைகளையுடைய 5 பெரிய கோபுரங்கள் முழுமையாக புனரமைத்து வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. புதிய கொடிமரம் நடப் பட்டு புதுப்பொலிவாக காட்சியளிக் கிறது. இக்கோயிலின் குடமுழுக்கு வரும் பிப்ரவரி 6-ம் தேதி நடத்த திட்டமிட்டு, அதற்கான யாகசாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT