பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப் பவர்கள் தொடர்பான காவல்துறை விசாரணைக்கு `டேப்லெட்’ (TABLET) எனப்படும் கையடக்க கணினியை பயன்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவு றுத்தியுள்ளது. இது தொடர்பாக மாநில டி.ஜி.பி.க்களுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் மண்டல பாஸ் போர்ட் அலுவலகங்கள் உள்ளன. வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பு, கல்வி, மற்றும் சுற்றுலா என பல்வேறு தேவைகளுக்காக செல்பவர்கள் பாஸ்போர்ட் எடுக்க மேற்கண்ட நகரங்களில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்கின்றனர். உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த படியாக அதிகளவு பாஸ்போர்ட் பெறும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது.
தற்போது சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 550 பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப் படுகிறது. அதேபோல், பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பவர்களுக்கு அதிகபட்சமாக 30 நாட்களுக் குள் பாஸ்போர்ட் வழங்கப் பட்டு விடுகிறது. இதில், காவல் துறையினரின் விசாரணைக்கு மட்டும் 10 நாட்களுக்கு மேல் ஆகிறது. இக் காலதாமதத்தை குறைப்பதற்காக `டேப்’ கருவியின் மூலம் விசாரணை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் `தி இந்து’விடம் கூறியதாவது:
பாஸ்போர்ட் பெற விண்ணப் பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கு முன்பாக அவர்கள் மீது ஏதாவது குற்ற வழக்குகள் உள்ளதா என்பது குறித்து கண்டறிவதற்காக அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையங்களுக்கு அவர்களது விண்ணப்பம் அனுப்பி வைக்கப்படும். அந்த விண்ணப் பத்தின் அடிப்படையில் அங்குள்ள போலீஸார் சம்பந்தப்பட்ட மனுதாரர் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அனுப்புவர். இப்பணி யை மேற்கொள்ள குறைந்த பட்சம் 10 நாட்களுக்கு மேல் ஆகிறது.
எனவே இந்த காலதாமதத்தைக் குறைக்க ‘டேப்’ கருவி மூலம் விசாரணை விவரங்களை பதிவு செய்து அனுப்பினால் உடனடியாக நாங்கள் அந்த தகவல்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு உடனடியாக பாஸ்போர்ட் வழங்க முடியும். இதுகுறித்து, மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் அனைத்து மாநில டிஜிபி-க்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. அதில் ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் ‘டேப்’ வழங்க பரிந்துரை செய்துள்ளது. இத்திட்டம் ஏற்கெனவே ஹைதராபாத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரு வதையடுத்து தற்போது பிற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள ஒரு விண்ணப்பத்துக்கு ரூ.100 வீதம் மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்கி வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் மத்திய அரசு தமிழக அரசுக்கு ரூ.7 கோடியை வழங்கி யுள்ளது. இவ்வாறு மத்திய அரசு வழங்கும் நிதியில் இருந்து இக்கருவியை மாநில அரசு வாங்கலாம்.
தமிழக அரசு இந்த நடைமுறையை செயல்படுத்த முன்வர வேண்டும். அவ்வாறு செய்தால் இன்னும் விரைவாக பாஸ்போர்ட் வழங்க இயலும்.
இவ்வாறு பாலமுருகன் கூறினார்.
போலீஸ் விசாரணைக்கு கால தாமதம் ஆவது ஏன்?
சாதாரணமாக பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் போது அந்த விண்ணப்பப் படிவங்கள் கணினியில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து விரைவுத் தபால் மூலம் சம்பந்தப்பட்ட மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து அந்த விண்ணப்பம் சம்பந்தப்பட்ட காவல் நிலையத் துக்கு அனுப்பப்படுகிறது. அந்த காவல் நிலையத்தில் உள்ள போலீஸார் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் வீட்டுக்கு சென்று விசாரணை செய்து தனது அறிக்கையை மீண்டும் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அனுப்பி வைப்பார். கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து அந்த அறிக்கை பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அனுப்பப்படும். இந்த நடைமுறையால் கால விரயமும், பேப்பர் விரயமும், செலவும் ஏற்படுகிறது.
இந்நிலையில், அனைத்து காவல் நிலையங்களிலும் பாஸ்போர்ட் விசாரணைக்கு பொறுப்பு வகிக்கும் போலீஸார் விசாரணை மேற்கொள்ள வேண்டியவர் தொடர்பான விவரங்களை பாஸ்போர்ட் அலுவலக இணையதளத்திலிருந்து ‘டேப்’ கருவி மூலம் பெற்று, விசாரித்து அறிக்கையை அதே கருவி மூலம் அனுப்பினால் பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்தே அந்த விண்ணப்பத்தின் மீதான விசாரணை அறிக்கையை பார்த்து அதன் அடிப்படையில் பாஸ்போர்ட் வழங்க இயலும்.