தமிழகத்தில் உள்ள எல்லா தனியார் பள்ளிகளிலும் காலை இறை வணக்க கூட்டத்தின்போது கண்டிப்பாக தேசிய கீதம் பாடவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் என்.செல்வ திருமால் தேசியகீதம் தொடர்பாக பொதுநல மனு தாக்கல் செய்து இருந்தார். இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஎஸ்இ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி தேசிய கீதம் மற்றும் தேசியக்கொடிக்கு உரிய மரியாதை அளிப்பது தொடர்பாக அனைத்து பள்ளிகளும் கடை பிடிக்க வேண்டிய கட்டளைகள் குறித்து 2015 நவம்பர் 10-ல் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது.
அதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘‘தேசிய கீதம் என்பது பாடத்திட்டத்தின் ஒரு அங்கம். எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் காலை இறைவணக்கக் கூட்டத்தின் போது கண்டிப்பாக தேசிய கீதம் பாட வேண்டும். அதிகாரிகள் இதை கண்காணிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.