தேமுதிக- மக்கள் நலக்கூட்டணியில் வேட்பாளர் பட்டியலே இன்னும் வெளியிடப்படாத நிலையில், அமைச்சர்கள் பட்டியலை அறிவித்தார் தேமுதிக இளைஞரணிச் செயலாளர் சுதீஷ்.
5-ம் கட்ட பிரச்சாரம்
தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சார களத்தில் மக்கள் நலக்கூட்டணி முன்னணியில் உள்ளது. ஏற்கெனவே 4 கட்ட பிரச் சாரம் முடிவடைந்துள்ள நிலையில், 5-ம் கட்ட பிரச்சாரக் கூட்டம், கடந்த திங்கள்கிழமை நாகர்கோவிலில் தொடங்கியது. நேற்றுமுன்தினம் பாளையங்கோட்டை, சங்கரன் கோவில், கோவில்பட்டி ஆகிய இடங்களில் கூட்டங்கள் நடை பெற்றன.
துணை முதல்வர் வைகோ
கோவில்பட்டி கூட்டத்தில் பேசிய தேமுதிக இளைஞரணி செயலாளர் சுதீஷ், அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். ‘இக்கூட்டணி தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, விஜயகாந்த் முதல்வராக பொறுப்பேற்பார். அப்போது துணை முதல்வராக வைகோவும், கல்வி அமைச்சராக திருமாவளவனும், நிதி மற்றும் உள்துறை அமைச்சர்களாக இரு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் பதவியேற்பர்.
டெல்லியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பில், எங்கள் கூட்டணி 140 முதல் 150 இடங்களை வெல்லும் என்று தெரியவந்துள்ளது. வெற்றி பெற்றதும் தமிழகம் முழுவதும் `வைபை’ வசதி ஏற்படுத்தப்படும். தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்றுவோம்’ என்றார் அவர்.
இன்னும் வேட்பாளர் பட்டியலே அறிவிக்கப்படாத நிலையில் அமைச்சர்கள் பட்டியல் குறித்து சுதீஷ் அறிவித்தது, கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்களை மட்டுமல்ல, மேடையில் அமர்ந்திருந்த தலைவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இருப்பினும் சுதீஷ் பேச்சுக்கு யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. கூட்டணி தலைவர்கள் அனைவரும் ரசித்து கேட்டனர். தொடர்ந்து பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ‘அதிமுக ஊழல் மூலம் சேர்த்த பணத்தில் ஒரு தொகுதிக்கு ரூ.10 கோடி வீதம் செலவழிக்க தயாராகி வருகிறது’ என்றார் அவர்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசும்போது, ‘தமிழகத்தில் தொங்கு சட்டப்பேரவை அமையும் என்று பலர் கூறுகின்றனர். அது தவறு. இக்கூட்டணி 234 தொகுதியிலும் மாபெரும் வெற்றி பெறும்’ என்றார் அவர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பேசும்போது, ‘இந்த கூட்டணியை ஒருங்கிணைப்பாளர் வைகோ பாசப்பிணைப்புடன் ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார். விஜயகாந்த் மே-23ல் முதல்வராக பதவி ஏற்பார்’ என்றார் அவர்.
மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசும்போது, ‘திமுக, அதிமுகவை அகற்றி விட்டு, நல்லாட்சி தர வேண்டும் என்பதற்காக இந்த கூட்டணி ஏற்பட்டுள்ளது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் மீது அவதூறு பரப்பி வருகின்றனர்’ என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் உள்ளிட்டோர் பேசினர்.