தமிழகம்

பறக்கும் படையினர் சோதனை: ரூ.1.73 கோடி பணம் பறிமுதல் - 1,041 கிராம் நகைகள் பிடிபட்டன

செய்திப்பிரிவு

தேர்தல் விதிமீறல் தொடர்பாக பறக்கும் படையினரால் ரூ.1 கோடியே 17 லட்சமும், 1,041 கிராம் தங்க நகைகளும், நிலையான கண்காணிப்பு குழுவினரால் ரூ.56 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சட்டப்பேரவை பொதுத்தேர்தலையொட்டி, உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டு உரிய விசாரணைக்குப் பிறகு தொடர் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மார்ச் 10-ம் தேதி முறையான ஆவணங்கள் இல்லாமல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.5 லட்சமும், நீலகிரி மாவட்டத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3 லட்சத்து 19 ஆயிரமும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எடுத்துச் சென்ற ரூ.7 லட்சத்து 8 ஆயிரமும், விருதுநகர் மாவட்டத்தில் கொண்டு சென்ற ரூ.3 லட்சத்து 45 ஆயிரமும் தேர்தல் பணியில் உள்ள பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இல்லாத 1,041 கிராம் மதிப்புள்ள தங்க நகைகள், திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ. 61 ஆயிரத்து 500, மதுரை மாவட்டத்தில் ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.30 லட்சத்து 6 ஆயிரம் மார்ச் 10-ம் தேதி கைப்பற்றப்பட்டன. இதுவரை பறக்கும் படையினரால் ரூ.1 கோடியே 17 லட்சத்து 2 ஆயிரத்து 660-ம், 1,041 கிராம் தங்க நகைகளும், நிலையான கண்காணிப்புக் குழுவினரால் ரூ.56 லட்சமும் கைப்பற்றப்பட்டது. மார்ச் 10-ம் தேதி வரையில் 51 வழக்குகள் தொடரப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளன.

பெரியகுளத்தில் ஒரு திருமணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட அரசியல் கட்சித் தலைவர் படம், கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட தாம்பூலப் பைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. தூத்துக்குடியில் அரசு அலுவலக சுவர்களில் அனுமதியின்றி விளம்பரம் செய்தவர்கள் மீதும் முறையான அனுமதி பெறாமல் கம்பம் பகுதியில் பிரச்சாரம் செய்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT