தமிழகம்

தேர்தல் விதிமீறல் புகார் குறித்து பறக்கும் படைக்கு எஸ்எம்எஸ்: புதுமையான சேவை சென்னையில் தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை மாநகரப் பகுதியில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் அளிக்கும் புகார்களை உடனுக்குடன் பறக்கும் படைக்கு தெரிவிக்க, மென்பொருள் மூலம் எஸ்எம்எஸ் அனுப்பும் சேவையை சென்னை மாவட்ட தேர்தல் நிர்வாகம் தொடங்கியுள்ளது.

சென்னை மாவட்டத்தின் 16 தொகுதியிலும் விதிமீறல் நடக்கிறதா என கண்காணிக்க தலா ஒரு பறக்கும் படை, ஒரு நிலைப் படை, ஒரு வீடியோ பதிவு குழு என மொத்தம் 48 குழுக்கள் நியமிக்கப்பட்டு, கடந்த மார்ச் 4-ம் தேதி முதல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

பொதுமக்கள் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக புகார்களைத் தெரிவிக்க கட்டணம் இல்லாத தொலைபேசி எண் 1800 425 7012-ஐ மாவட்ட தேர்தல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதில் வரும் புகார்களைப் பெற ரிப்பன் மாளிகையில் சென்னை மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் சம்பந்தப்பட்ட எண்ணுக்கு தேர்தல் விதிமீறல் புகார்களைத் தெரிவித்தால், அந்த புகார்களைத் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மூலமாக, சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அலுவலர், துணை தேர்தல் அலுவலர் மற்றும் பறக்கும் படையினரின் இ-மெயிலுக்கு அனுப்பும் வசதியை, இந்திய தேர்தல் ஆணையம், அதன் இணையதளத்தில் ஏற்படுத்தியுள்ளது. களத்தில் இருக்கும் அதிகாரிகள், இ-மெயிலை படிப்பதில் சிரமங்கள் இருப்பதால், அவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக உடனடியாக தெரிவிக்கும் சேவையை சென்னை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்திரமோகன் கூறியதாவது:

ஏற்கெனவே மாநகராட்சி சார்பில், 1913 என்ற இலவச தொலைபேசி எண் வழியாக வரும் புகார்கள், எஸ்எம்எஸ் மூலமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் மென்பொருள் உருவாக்கப் பட்டு, அந்த சேவை அமலில் உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள, இ-மெயில் மூலமாக பெறப்படும் புகார்களை அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினருக்கு அனுப்பும் சேவையுடன், இந்த மென்பொருள் மூலமாக எஸ்எம்எஸ் மூலம் புகார்களை உடனுக்குடன் தெரிவிக்கும் சேவையை இணைத்திருக்கிறோம். இது ஒரு புதுமையான முயற்சி. இதன் மூலம் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்கள் மீது அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT