சென்னை: இயேசு பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மேலும், மாட்டுத் தொழுவத்தில் இயேசு பிறந்ததை விளக்கும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன.
சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணிக்கு சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் பங்கேற்றனர்.
இதேபோல, பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், பரங்கிமலை புனித தோமையார் ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களிலும் நள்ளிரவு கிறிஸ்துமஸ் திருப்பலி நடைபெற்றது. இதில் பங்கேற்றோர் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் இரவு அனைத்து தேவாலயங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேவாலயங்களில் நேற்று காலையிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதில், கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் புத்தாடைகள் அணிந்து, தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
இதுமட்டுமின்றி, கிறிஸ்தவர்கள் நேற்று தங்களது வீடுகளில் கேக்வெட்டி, நண்பர்கள், உறவினர்களுக்கு வழங்கினர். மேலும், செல்போன், தொலைபேசி மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.மேலும், மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகள், பூங்காக்களுக்கு ஏராளமானோர் சென்று மகிழ்ந்தனர்.