புதுச்சேரி மசாஜ் மையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரி நெல்லித்தொப்பு அண்ணா நகர் மசாஜ் மையத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாக 17 வயது சிறுமியை சில வாரங்களுக்கு முன்பு உருளையன்பேட்டை போலீஸார் மீட்டனர். விசாரணையில் அச்சிறுமியிடம் 40 பேர் வரை பாலியல் சீண்டல் மற்றும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து மசாஜ் மைய உரிமையாளரான சுனித்தா என்பவரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அப்போது அங்கு வாடிக்கையாளர்களாக வந்து சென்ற நபர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சுனித்தா உள்ளிட்ட 40 பேர் மீது உருளையன்பேட்டை போலீஸார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து கடலோர காவல்படை வீரரான மதுராந்தகத்தைச் சேர்ந்த ஜெகத்ரட்சகன் (30) உள்ளிட்ட 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் பகுதியைச் சேர்ந்த திருமலை (28), புதுச்சேரி சித்தன் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (24) ஆகிய 2 பேரை உருளையன்பேட்டை போலீஸார் நேற்று கைது செய்தனர். இவர்கள் இருவரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இதுவரை 12 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 28 பேரையும் போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.