முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 92-வது பிறந்த நாளையொட்டி புதுச்சேரி பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன் நிறைவு நிகழ்ச்சியாக தேசிய நல்லாட்சி தினம் கடற்கரை சாலையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபம் எதிரில் நேற்று மாலை நடைபெற்றது.
மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக தமிழக பாஜக நிர்வாகியும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் கலந்து கொண்டு பேசியதாவது:
கம்யூனிஸ்ட் கட்சி பிரபலமாவதற்கு தஞ்சாவூர் பகுதியில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும், மதுரை பகுதியில் பாவலர் வரதராஜனும் தான் காரணம். உழைக்கும் மக்களின் விஷயங்கள், பஞ்சங்கள், பசியை பற்றி பாடி பிரபலப்படுத்தினர். அதற்கு பிறகு தான் விவசாய சங்கங்கள் எல்லாம் உருவானது.
இந்த கட்சியை தவிர வேறு இல்லை என்று இருந்த நேரத்தில், எனது அண்ணன் மீது ஒரு பொய் வழக்கு போடப்பட்டு கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டார். அவரை காப்பாற்ற கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களுக்கு தெரியவில்லை. ஒருத்தர் கூட வரவில்லை. எங்கள் வாழ்க்கையில் அரசியல் இல்லாமல் இல்லை.
அதன்பிறகு எங்கள் குடும்பத்தில் அரசி யலில் யாரும் இல்லை. இப்போது கட்சியில் இருக்கும் ஒரு ஆள் நான்தான்.
பாஜகவுக்கு பெரிய பிளஸ் என்வென்றால் கடவுள் உண்டு. கருப்பு சட்டை போட்டுக்கொண்டு சுற்றுகின்ற, சாமி சிலைகளை அவமதிக்கின்ற ஆட்கள்கிடையாது. தெய்வத்தை நம்பி வாழ்ப வர்கள் நாம். தெய்வத்தை நம்பியோர் கைவிடப் படமாட்டார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.