மதுரை மாநகராட்சியில் ரூ.40 கோடியில் அறிவித்த 258 சாலைகள் அமைக்கும் பணி பூமிபூஜையோடு நின்றுபோனது.
மாநகரின் வளர்ச்சிக்குச் சாலைக் கட்டமைப்பு மிக அவசியம். ஆனால், தமிழகத்தின் 2-வது பெரிய நகரம் எனச் சொல்லப்பட்ட மதுரை, அடிப்படை வசதிகளைச் செய்துதருவதில் மற்ற நகரங்களை விட பின்தங்கி உள்ளது.
சாலை கட்டமைப்பு மன்னர் ஆட்சிக் காலத்தில் இருந்த அதே கட்டமைப்பிலேயே இன்னும் உள்ளது. மீனாட்சியம்மன் கோயி லைச் சுற்றியுள்ள சாலைகளை ஒரு வழிச் சாலையாகப் பயன்படுத்தும்நிலை உள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் புதிதாக உருவான குடியிருப்புகளில் சாலை கட்டமைப்புகளுக்கு உள்ளூர் திட்டக் குழுமமும், மாநகராட்சியும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதனால், பெரும்பாலான குடியிருப்புகளை இணைக்கும் சாலைகள் மண் சாலைகளாகவே உள்ளன. மழைநீர் வடிகால்களை முறையாக அமைக்காததால் சிறு மழைக்கே சாலைகளில் தெப்பம்போல் தண்ணீர் தேங்குகிறது. பராமரிப்பில்லாத முக்கியச் சாலைகளில் கடந்த காலங்களில் ஒட்டுப் போட்டாவது சீரமைக்கும் பணி நடந்தது. தற்போது அதுகூட நடப்பதில்லை.
குடியிருப்புப் பகுதி சாலைகள் பாளம் பாளமாக பெயர்ந்துள்ளன. மண் சாலைகள் மழைக்காலத்தில் முற்றிலும் மக்கள் நடந்துசெல்ல முடியாத அளவுக்கு உள்ளன.
மழைக்குப் பின்னர் பழுதடைந்த பாதாள சாக்கடைகளைப் பராமரிக்கும் பணியும், புறநகர் வார்டுகளில் புதிதாக பாதாள சாக்கடை அமைக்கும் பணியும் நடக்கின்றன. அதனால், சாலைகளில் குழிகளைத் தோண்டியுள்ளனர். இப்பணிகளும் தாமதமாக நடக்கிறது.
மாநகராட்சிக்கான வரிகளை முறையாகச் செலுத்தியும் சாலைக் கட்டமைப்புகளை மேம்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
இந்நிலையில் ரூ.40 கோடியில் 2 கட்டங் களாக 258 சாலைகளை அமைக்க மாநகராட்சி ஒப்பந்தம் விட்டு, கடந்த வாரம் பூமி பூஜை நடந்தது. முதற்கட்டமாக 139 சாலைகளும், 2-ம் கட்டமாக 119 சாலைகளும் அமைக்கப்பட உள்ளன. ஆனால், இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. இதற்கிடையே, ஜனவரி, பிப்ரவரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சாலைப் பணி மேலும் தாமதமாகும் வாய்ப்புள்ளதால், புதிய சாலைகள் அமைக்கும் பணியைத் தொடங்கி விரைவாக முடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.