திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஐஸ் கட்டி மீது 51 யோகாசனங்களை பள்ளி மாணவி செய்துள்ளார்.
தி.மலை மாவட்டம் பண்டிதப் பட்டு ஊராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சள் பை பயன்பாட்டை வலியுறுத்தியும் மற்றும் உலக சாதனை முயற்சிக்கான யோகாசனம் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நேற்று நடைபெற்றது. தனியார் பள்ளி தலைவர் ராதா தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் ராஜாத்தி அய்யனார், யோகா பயிற்சியாளர் சுரேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பழைய மண்ணை நடுநிலை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் குணசீலன் வரவேற்றார்.
விழிப்புணர்வு யோகாசனத்தை ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாநிதி தொடங்கி வைத்தார். பண்டிதப் பட்டு ஊராட்சியில் வசிப்பவரும், தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவியான பி.வர்ஷா, ஐஸ் கட்டி மீது ஏகபாத சிரசாசனம், தனுராசனம், விருட்சிக ஆசனம், சிரசாசனம், பத்ம சிரசாசனம் என 51 ஆசனங்களை 3 நிமிடம் 51 விநாடிகளில் செய்து அசத்தினார். இதையடுத்து, சாதனை படைத்த வர்ஷா உட்பட 10 மாணவர்களுக்கு நடிகர் தாடி பாலாஜி பரிசு வழங்கிப் பாராட்டினார்.
இதில், மாவட்ட கல்வி துணை ஆய்வாளர் குமார், வட்டார வள மைய மேற்பார்வையாளர் துரைசாமி, மாணவியின் பெற் றோர் புஷ்பநாதன், நிர்மலா உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், யோகா பயிற்சியாளர் கல்பனா நன்றி கூறினார்.