கோப்புப் படம் 
தமிழகம்

அரசின் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் முழுமையாக கடைபிடிக்கவும்: ஜி.கே.வாசன்

செய்திப்பிரிவு

சென்னை: மத்திய மாநில அரசுகளின் கரோனா, ஒமிக்ரான் நோய் தடுப்பு கோட்பாடுகளை நூறு சதவீதம் முறையாக கடைபிடித்து ஒமிக்ரானுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

"நம் நாட்டில் கரோனாவைத் தொடர்ந்து பரவி வரும் ஒமிக்ரான் வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகளில் பொதுமக்கள் ஒவ்வொருவரும் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகமாகி வருவதால் நம் நாட்டிலும் அதன் தாக்கம் அச்சுறுத்த தொடங்கிவிட்டது. ஆரம்பக்கட்டத்திலேயே இந்நோயை கட்டுப்படுத்தி, முற்றுப்புள்ளி வைப்பதற்கு அரசும், பொது மக்களும் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இச்சூழலில் நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் நோய் எதிர்ப்புக்காக அதிக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். காரணம் கரோனா நோய் தடுப்புக்காக 2 தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளும், கல்லூரி மாணவர்களும் வைரசால் பாதிக்கப்படக்கூடும்.

அது மட்டுமல்ல நோய் பரவல் அதிகமானால் ஊரடங்கு, தளர்வு என கட்டுப்பாடு ஏற்படும், ஏழை, எளிய மக்களுக்கும், சிறு குறு தொழில் செய்வோருக்கும் வருமான இழப்பு ஏற்படும், நாட்டின் பொருளாதாரம் பின்தங்கும். எனவே ஒவ்வொரு தனி நபரும் தனது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களையும், பொது மக்களையும் நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கவும், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் அக்கறையோடு செயல்பட வேண்டும்.

மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும். கூடுதலாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தினால் நோய் எதிர்ப்புக்கு உகந்தது என்றால் அதற்கும் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் அறிவுறுத்தல்கள், ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு செயல்படவும், தேவைப்பட்டால் கூடுதல் நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசு பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், விவசாயிகள், பொது மக்கள் என அனைத்து தரப்பினரையும் வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்து, தொழில்கள் பாதிக்கப்படாமல், பொருளாதாரத்தை மேம்படுத்தி தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கும், தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கும் தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்."

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT