காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமையல் கலை பயிற்சி முடித்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு, பணி ஆணையை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி நேற்று வழங்கினார். 
தமிழகம்

சமையல் கலை பயின்ற நரிக்குறவர் இளைஞர்களுக்கு பணி ஆணை: காஞ்சி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமையல் கலை பயின்ற நரிக்குறவர் இளைஞர்களுக்கு பணி ஆணைகள் நேற்று வழங்கப்பட்டன.

சமூகத்தில் உள்ள அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் முயற்சியால் 7 நரிக்குறவர் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சென்னை அமிர்தாஸ் நிறுவனத்தில் சமையல் கலைக்கான 3 மாத பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அவர்கள் அந்த பயிற்சியை தற்போது நிறைவு செய்துள்ளனர்.

இந்த பயிற்சி முடித்த 7 நரிக்குறவர் இளைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, ஊட்டியில் உள்ள எச்.பி.எச். ஹோட்டல் நிறுவனத்தில் பணி அமர்த்துவதற்கான பணி ஆணையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் சீனுவாசராவ் உட்பட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT