சென்னை: சென்னை மாநகராட்சி நடத்தி வரும் அம்மா உணவகங்களுக்கு காய்கறி, மளிகை, சமையல் காஸ் சிலிண்டர் விநியோகம் செய்த வகையில், டியூசிஎஸ் கூட்டுறவு சங்கத்துக்கு மாநகராட்சி ரூ.26 கோடி நிலுவை வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணியை தலைமையிடமாகக் கொண்டு, 1904-ல் டியூசிஎஸ் கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டது. சென்னையில் பல்வேறு கிளைகளைக் கொண்டுள்ள இந்த சங்கம், 1,000-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், பெட்ரோல் பங்குகள், சமையல் காஸ் விநியோகம் உள்ளிட்ட சேவைகளில் ஈடுபட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி சார்பில் 403 இடங்களில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களுக்கு மளிகை, காய்கறி, சமையல் காஸ் ஆகியவற்றை டியூசிஎஸ் நிறுவனம் விநியோகித்து வருகிறது. மாதந்தோறும் சராசரியாக ரூ.4.50 கோடி மதிப்பில் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. ஊரடங்கு, மழை வெள்ளக் காலங்களில் மாநகராட்சியின் நிவாரணப் பணிகளுக்கு அம்மா உணவகங்கள் உதவியாக இருந்தன.
இந்நிலையில் டியூசிஎஸ் சங்கத்துக்கு மாநகராட்சி ரூ.26 கோடி வரை நிலுவைத்தொகை வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு கூட்டுறவு தொழிற்சங்க கூட்டமைப்புத் (ஏஐடியுசி) தலைவர் வி.முத்தையா கூறியதாவது: நூற்றாண்டு பழமைவாய்ந்த இந்த கூட்டுறவு சங்கம், மத்திய கூட்டுறவு வங்கியில் 14 சதவீதம் வட்டிக்கு கடன் வாங்கி, மாநகராட்சி நடத்தி வரும் அம்மா உணவகங்களுக்கு மளிகை, காய்கறி, சமையல் காஸ் ஆகியவற்றை நேரடியாக விநியோகித்து வருகிறது.
மாநகராட்சிக்கு மாதந்தோறும் சுமார்ரூ.4.50 கோடிக்கு பொருட்களை விநியோகிக்கிறது. ஆனால், உரிய தொகையை உரிய காலத்தில் பெற முடியாததால், வட்டி கட்டியே டியூசிஎஸ் சங்கம் நலிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி ரூ.26 கோடி நிலுவை உள்ளதாகத் தெரிகிறது.
அரசின் கோபத்துக்கு ஆளாகக் கூடாதுஎன்பதாலும், மாநகராட்சி ஆணையர்மூத்த ஐஏஎஸ் அதிகாரி என்பதாலும், மாநகராட்சி நிர்வாகத்திடம் நிலுவைத்தொகையை வசூலிப்பதில் டியூசிஎஸ் அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்.
இதனால் பொருட்களை கொடுத்தவியாபாரிகளுக்கும் உரிய காலத்தில்டியூசிஎஸ் நிறுவனத்தால் பணம் செலுத்த முடியவில்லை. வங்கிக் கடனையும் உரியகாலத்தில் செலுத்த முடியாமல், வட்டிகட்டி வருகிறது. உரிய காலத்தில் பணம்கிடைக்காததால் வியாபாரிகளும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். தொழிலாளர்களுக்கும் பணிப் பலன்கள், ஓய்வூதியப் பலன்களை வழங்க முடியவில்லை.
பணியாளர் நியமனம் நேர்மையாக நடைபெறாததால், அங்குள்ள தொழிற்சங்கமும் பலவீனமடைந்து, டியூசிஎஸ் நிர்வாகத்தையும், அரசையும் கேள்வியெழுப்பவும், போராடவும் முடியாத நிலை உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு, டியூசிஎஸ் நிறுவனத்துக்குச் சேரவேண்டிய தொகையை, மாநகராட்சியிடம் பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "மாநகராட்சியின் சொந்த நிதியில் இருந்து வாரந்தோறும் பணம்கொடுத்து, நிலுவைத் தொகையை கழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், நிலுவைத்தொகையை வழங்க நிதி ஒதுக்குமாறு அரசுக்கும் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது" என்றனர்.